முதல் முகவரி
முதல் முகவரி, வெ. நீலகண்டன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 140ரூ.
வாழ்வில் சிகரத்தை எட்டிய பலர், முறையாகச் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி அந்த உயரத்தை எட்டவில்லை. தங்களுக்கான படிக்கட்டுகளை தாங்களே செதுக்கித்தான் உச்சிக்குப் போயிருக்கறிர்கள். நம்பிக்கை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமான உழைப்பை மட்டுமே தோழனாக்கிக்கொண்டு தங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறார்கள். எண்ணற்றோருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள். அப்படி சென்னைக்கு கனவுகளை மட்டும் சுமந்துவந்து அவற்றை நனவாக்கிக் காட்டியவர்களின் வாக்குமூலத் தொகுப்பு இது. சாதனையாளர்களின் முதல் முகவரி அடிப்படையில் சாதித்த சரித்திரங்கள் விவரிக்கின்றன. ஒவ்வொருவரும் நேரடியாகப் பேசுவது போன்ற உணர்வு, நூலாசிரியரான பத்திரிகையாளர் வெ. நீலகண்டனின் எழுத்து நடைச் சிறப்பு, வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வேதமாகும், இந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 5/6/2013.
—-
அதிர வைக்கும் அகோரிகள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 120ரூ-
எரியூட்டப்பட்ட மனிதர்களின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு, மண்டை ஓட்டில் உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டு சுடுகாட்டிலேயே சுற்றித்திரியும் அகோரிகள், நம் கண்களுக்கு அச்சுறுத்தும் வகையிலேயே தெரிவார்கள். ஆனால் அகோரிகள் யார்? அவர்களின் நிலைபாடு என்ன? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அவ்வாறு இருக்கிறார்கள்? என்பது பற்றி நூல் ஆசிரியர் அலசி ஆராய்ந்து விவரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/6/2013.
—-
பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக்கழகம், செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார், அமிழ்தமணி பதிப்பகம், 6டி, ஜமாலியா நகர், சென்னை 12, விலை 75ரூ.
திருச்சி முதல் காஷ்மீர் வரையுள்ள காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் அற்புதமாக தொகுத்து வழங்கி இருக்கிறார் இந்த நூலிவன் ஆசிரியர். பயண நூலை பயனுள்ள நூலாக படைத்துள்ளார். பயண முன்னேற்பாட்டின் தேவையையும் பக்குவமாக எடுத்துரைத்துள்ளார். பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக்கழகம் என்று அவரது பார்வை பதிந்த இடங்களை எல்லாம் குறிப்பிட்டு அந்த இடங்களுக்கெல்லாம் இந்த நூல் மூலம் சிறப்பு சேர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/6/2013.