முப்பத்தி நாலாவது கதவு
முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 140, விலை 120ரூ.
இந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர், தமிழ் இலக்கியப் படைப்புப் பணிகளிலும், இலக்கிய வட்டப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலிலுள்ள சிறுகதைகள் அனைத்துமே உருது, கொங்கணி, பஞ்சாபி, ஆங்கிலம், ஒரியா, ஜாவா, அஸ்ஸாமி, மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் பலர், வாழ்க்கை தரும் நெருக்கடிகளுக்கும், உறவுகள் தரும் ஏமாற்றங்களுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களின் கதைகளே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலும், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், இம்மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்னைகள், எண்ணங்கள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. மூட நம்பிக்கைகளை விட்டு மக்கள் விலகி வாழ வேண்டும் என்று பகுத்தறிவு விஷயங்களை தெருவோர நாடகங்களாகப் போட்டு போராடும் நாராயணனின் வீட்டுக்குள்ளே, மூடநம்பிக்கை எப்படி அவர் மகள் மூலம் துளிர் விடுகிறது என்பதைக் கூறும் குவியம் என்ற தலைப்பிலான கொங்கணி கதையை, அதன் இயல்பு கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காமராசன். இப்படி இந்நூலில் உள்ள 13 சிறுகதைகளும் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. நன்றி: துக்ளக், 5/11/2014.
—-
சர்க்கரை வியாதி, டாக்டர் எஸ். ரவிச்சந்திரன், ரெங்கா அக்குபஞ்சர் மையம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ. இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளான உணவு மருத்துவம், மூலிகை மருத்துவம், கூழாங்கற்கள் நடைபயிற்சி, அக்குபஞ்சர், அக்குபிரஷர், புட் ரிப்ளாக்ஸாலஜி ஆகிய மருத்துவம் மற்றும் பயிற்சி முறைகள் போன்ற பன்முக மருத்துவ அணுகுமுறைகளால் சர்க்கரை நோய் கண்ட மக்கள் நீண்ட நாள் நல வாழ்வு பல வழிமுறைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி.