முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு (தொகுதி 1)
திராவிட இயக்க வரலாறு (தொகுதி 1), முரசொலி மாறன், கல் பப்ளிகேஷன்ஸ், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 4, விலை 200. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-491-5.html
பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான உரிமைகளுக்கு முதல் இயக்கமாக உருவெடுத்தது நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம். 1912ஆம் ஆண்டில் சென்னை ஐக்கிய சங்கம் என்று வேர்விட்டு பிறகு 1913ல் திராவிட சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது. 1917ல் அதன் அரசியல் அமைப்பாக வடிவம் கொண்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம் 1920ல் நான்கே ஆண்டுகளில் சென்னை மகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. 1912 முதல் 1920 வரை தமிழகத்தின் சமூக அரசியல் வரலாறுகளை விரிவாகப் பதிவு செய்துள்ளது. முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு(தொகுதி 1). நிலபிரபுத்துவத்துக்கு எதிராக விவசயாக் குடிமக்களையும் முதலாறித்துவத்துக்கு எதிராக தொழிலாளர்களையும் அணிதிருட்டுவதற்கான புரட்சிகள் உலக நாடுகளில் நடந்துள்ளன. அரே வரிசையில் இந்திய சமூக ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்கள் கட்டமைத்த பார்ப்பனியத்தால் கொடுமைகளுக்கு உள்ளான பார்ப்பனர் அல்லாத மக்களை அணிதிரட்டும் முயற்சிதான் இந்த இயக்கத்தின் அடிப்படை என்ற வரலாற்று உண்மையை ஆழமாக படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். இந்திய அரசியலில் சீர்திருத்தங்களை செய்வதற்கு முன்வந்த பிரிட்டிஷ் ஆட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு குழுவை நியமித்து. இக்குழுவின் பணிகள் தமிழகம் வருகை குறித்து விரிவான செய்திகளை இந்நூல் பதிவு செய்துள்ளது. முஸ்லிம்கள், சீக்கியர்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டதுபோல் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் தனித்தொகதிகள் வழங்கவேண்டும் என்று நீதிக்கட்சி வற்புறுத்தியது. இதை நேரடியாக வலியுறுத்துவதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்ற டாக்டர் நாயர் கடும் நீரழிவு நோயால் லண்டனிலேயே மரணம் அடைந்தார். ஆனாலும் பார்ப்பனரல்லாதோருக்கு தனித்தொகுதி ஒதுக்கக்கோரும் டாக்டர் நாயரின் கோரிக்கை வெற்றி பெற்றது. நீதிக்கட்சியின் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு 1917ல் ஆகஸ்ட்திங்கள் 19, 20 நாட்களில் கோவையில் நடந்தது. மாநாட்டுத் தலைவரான ராமராய நிங்கார் (பனகல் அரசர்) நீதிக்கட்சியின் கொள்கையைத் தெளிவாகவே பேசினார்- இந்தியா ஒரு தேசத்தன்மை பெறவேண்டுமெனில் சாதாரண மக்கள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் அறிவார்ந்த சமுதாயங்களோடு கூடவே முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லப்படவேண்டும். இந்த சமுதாயப் பிரச்னையில் காங்கிரஸ் எப்போதுமே கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்று கூறிய அவர் சமுதாய முன்னேற்றம் என்பதற்கான விளக்கத்தையும் முன்வைத்தார். முன்னேற்றம் என்பதற்குப் பொருள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதல்ல. ஒரு பிரிவுக்கும் இன்னொரு பிரிவுக்கும் இடையே அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கும் எவ்வித செயற்கைத் தடையும் இன்றி சமுதாய அமைப்பைச் சார்ந்த அதன் அனைத்து உறுப்பினர்களும் எல்லா வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பெற்றாகவேண்டும். இதுதான் உண்மையான முன்னேற்றமாகும். எங்கள் இயக்கம் இந்த முன்னேற்றக் கருத்தினைக் கொண்டு இயங்குற இயக்கமாகும். இந்நூலில் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்ட கால கட்டத்தில் பெரியார் தீவிரமான பொதுவாழ்வுக்கு வரவிலிலை. 1920ஆம் ஆண்டில்தான் அவர் காங்கிரசில் இணைத்துக்கொள்கிறார். பெரியாரின் பொதுவாழ்க்கை பிரவேசத்துக்குப் பிறகு பார்ப்பனரல்லாதார் இயக்கம் உரம் பெற்று எழுந்து நிற்கிறது. திராவிடர் இயக்கத்தின் மீது புழுதிவாரித் தூற்றப்படும் காலத்தில் இந்த நூல் மறுபதிப்பாக வெளிவந்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். சமூகத்தின் அடிப்படையான பார்ப்பன பார்ப்பனரல்லாதார் முரண்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல் தவறான பார்வையை சமூக இயங்கியலில் இருந்து சறுக்கிப் போய் கொச்சையான அவதூறுகளையும் வரலாற்றுப் புரட்டுகளையும் பரப்புவோருக்கு இந்நூல் சரியான பதிலாக அமைந்துள்ளது. ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் புள்ளி விவரங்கள் தரவுகளோடு சுவை குன்றாமல் வாசகர்களை பக்கங்களோடு பயணிக்கச் செய்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. திராவிட இயக்கம் தொடங்கிய இலக்கு நோக்கியப் பார்வையிலிருந்து இன்றைய திராவிட அரசியல் கட்சிகள் வெகுதூரம் விலகிப்போய் நிற்பதையும் இந்த நூடிலப் படிக்கும்போது உணரமுடிகிறது. -விடுதலை ராசேந்திரன். நன்றி: அந்திமழை, 26 செப்டம்பர் 2012.