ஓர் இந்திய கிராமத்தின் கதை
ஓர் இந்திய கிராமத்தின் கதை, தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழில் ச. சரவணன், பதிப்பாசிரியர் ரெங்கை முருகன், சந்தியா பதிப்பகம், 77, 53 வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கங்கள் 160, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-713-8.html
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீடு வாங்கிப் போட்டிருக்கும் கேளம்பாக்கம் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? பாம்பாட்டிகளும், குறிசொல்லிகளும், மோடிவித்தைக்காரர்களும், கூத்தாடிகளும் கடந்து செல்லும் ஓர் எளிமையான கிராமமாக இருந்தது. நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு நம் இந்தியக் கிராமங்களைப் புரிந்து கொள்வதற்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. ஆங்கிலம் தெரிந்தவர்களை வைத்து அந்தந்தப் பகுதியின் நம்பிக்கைகளை, கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை, பொழுபோக்குகளை, அம்சங்களைப் புத்தகங்கள் வாயிலாகவே புரிந்துகொள்ள முயன்றனர். அப்படி ஆங்கிலேயர்கள், தமிழகக் கிராமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எழுதப்பட்ட புத்தகமே இது. கேளம்பாக்கம் கிராமம், தமிழகக் கிராமங்களை அறிய ஒரு பருக்கைப் பதம். நூலில் மந்திரத்தால் மாங்காய் செடி உருவாக்கி, அதில் மாம்பழமும் காய்க்கவைக்கும் மேஜிக் காட்சியை நூலாசிரியர் விவரிப்பது விறுவிறுப்பானது. பிய்ந்துபோன ஒரு மாங்கொட்டையைக் கூடைக்குள் கவிழ்த்துவைத்து அது துளிர்க்க ஆரம்பித்து, வளர்ந்து, காய்த்துப் பழுக்கிற வரைக்கும் படிப்படியாக மக்களுக்குக் காட்டி ஆர்வம் ஊட்டுவார்கள் மோடிவித்தைக்காரர்கள். விறுவிறுப்பான சிறுகதைபோல அதை விவரித்து இருக்கிறார் ஆசிரியர். கிராமத்தில் நடைபெறும் கூத்துபற்றி விஸ்தாரமான ஒரு பகுதி நூலில் வருகிறது. மகாபாரதக் கிளைக் கதை ஒன்றை முழுவதுமாகவே சொல்லியிருக்கிறார். பாம்பாட்டிகள் விஷம் உள்ள பாம்புகளை கையில் வைத்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுப்பதும், அதைக் கையில் கொத்தவைத்து விஷத்தை முறித்துக் காட்டுவதும் அச்சமூட்டும், ஆபத்தான விளையாட்டாக இருந்தது என்கிறார் ராமகிருஷ்ண பிள்ளை. விஷமுறிவுக்கான வேர்களை விற்பதற்காகப் பாம்பாட்டிகள் உயிரையே பணயம் வைக்கும் பரிதாபம் அது. அன்றைய கிராமத்தின் வாத்தியார், ஆசாரி, வைத்தியர், மாடு மேய்ப்பவர், விவசாயி என ஒவ்வொருவர் பற்றியும் சிறு குறிப்புகள் இதில் உண்டு. ஒவ்வொருவரையும் ஒரு சிறுகதையின் கதாபாத்திரம்போல அறிமுகப்படுத்துகிறார். அதில் ஒரு முக்கியமான தகவலையும் சொல்லிச்செல்கிறார். அடுத்து நாம் காணப்போவது நல்லாப்பிள்ளை வாத்தியார். இவர் மகாபாரதத்தை தமிழில் எழுதிய நல்லாப்பிள்ளையின் கொள்ளுப்பேரன் ஆவார். மகாபாரதத்தின் 14000 பாடல்களும் இவருக்கு தலைகீழப் பாடம். ஒவ்வொரு ஆயுத பூஜையின்போதும் அதை வைத்துப் பூஜை செய்வார் என்று சொல்லிக்கொண்டு போகிறார். சுவாரஸ்யமான நடைச் சித்திரமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் பாணியிலேயே இந்தியாவின் பிற பகுதிபற்றியும் நூல்கள் எழுதப்பட்டன என்கிறார் பதிப்பாசிரியர். தமிழில் எழுதப்பட்ட நூல் போலவே மொழிபெயர்த்து இருப்பது மொழிபெயர்ப்பாளர் சரவணனின் திறமை. நன்றி: ஆனந்தவிகடன், 6 பிப்ரவரி 2013.