இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு
இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு, கிருஷ்ணா அனந்த், தமிழாக்கம் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக்கங்கள் 368, விலை 250ரூ
நம் நாடு சுதந்திரம் பெற்று, அறுபது ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. அதன் அரசியல் வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல் களங்களில் உள்ள அதிரடித் திருப்பங்கள் உட்பட தலைவர்கள், கட்சிகள், அதன் கொள்கை மாற்றங்கள் என, பன்முக பார்வை இதில் அடக்கம். அந்தப் பார்வையில், ஆங்கிலத்தில் இந்த நூலை ஆக்கிய கிருஷ்ணா அனந்த், கடந்த கால நிகழ்வுகளை, ஆற்றொழுக்காக பதிவு செய்திருக்கிறார். தமிழில் அந்த உணர்வு, அப்படியே பதிவாகி இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பாகும். இந்திரா காந்தி பிரதமராக வந்ததும் அவருக்கு உதவியாக இருந்த மோகன் குமாரமங்கலம் கூறிய மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக திருத்த முடியாத புனிதமாக அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கருதக்கூடாது என்று வலியுறுத்தியதை (பக்கம் 109)ல் காணலாம். ஜெயப்பிரகாஷ் நாராயணன் முழுப்புரட்சியை காவல் துறையின் இரும்புக் கரங்களால் இந்திரா அடக்கியது அதற்கு பின் நடந்த வரலாற்று திருப்பங்கள் தொடர்ச்சியாக பதிவாகி உள்ளன. பின்பு 80களில் இந்திய அரசியல் எழுச்சி பெற்றவிதம், சஞ்சய் காந்தியின் மாருதி ஊழல், அந்துலே ஊழல் இவற்றை இந்த நூலில் முழுமையாக அறிந்து கொள்ளலாம். திருவாளர் பரிசுத்தம் என்று பெயரெடுத்த ராஜிவ் காந்தி போபர்ஸ் ஊழலால் கறைபடிந்து, அந்த முகத்திரை கிழிந்ததையும் வரிசைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பாபர் மசூதி விவகாரம் அத்வானி ரதயாத்திரை அதன் விளைவுகள் ஆகிய தொடர் நிகழ்வுகளும் இந்த நூலில் அடக்கம். இன்றைய நிலையில் மாநில மற்றும் பிராந்திய அளவிலான சிறிய கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியதை விளக்கி உள்ளார் ஆசிரியர். பொதுவாக நாம் வளர்ந்து நிலை பெற்ற நாடாக வளர அரசில் திருப்பங்கள் உதவியிருக்கிறதா என்பதை சம்பவங்களோடு ஒத்திட்டு மொத்தம் 14 தலைப்புகளில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும் -பாண்டியன் நன்றி:தினமலர்,03, பிப்ரவரி 2013