முரண் எங்கெங்கு காணினும்
முரண் எங்கெங்கு காணினும், சேஷ், வெங்க், XLOG, சென்னை 33, பக். 176,விலை 110ரூ.
முரண்பாடுகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் என எங்கெங்கு காணினும் முரண்கள். முரண்களைத் தவிர்க்கவும் முடியாது. எனவே முரண்களோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்லும் நூல். ஆனால் வாழ்க்கையில் முரண்பாடுகள் மட்டுமே இருப்பதில்லை. ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன. இல்லையென்றால் வளர்ச்சி எப்படி ஏற்பட முடியும்? உலகம் எப்படி இயக்க முடியும்? ஒற்றுமைக்கும் இணக்கத்துக்கும் இந்நூல் அழுத்தம் தரவில்லை. தனிமனிதர்கள் சந்திக்க நேர்கிற முரணகள் மட்டுமல்ல, உலகு தழுவிய, நாடு தழுவிய முரண்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. அவை தனிமனிதர்கள் வாழ்வில் பெரிய அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் தனி மனிதர்களின் வாழ்க்கையையே தீர்மானிக்கின்றன. அவற்றைப் பற்றி இந்நூல் பேசவில்லை. உதாரணமாக பிரிட்டிஷ் ஏகாதிப்த்தியத்துக்கும், நமது மக்களுக்கும் இடையிலான முரண்பாடு சுதந்திரப் போராட்டமாக வெளிப்பட்டது. சுதந்திரப் போராட்டம் அன்றைய மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.சுதந்திரப் போராட்டத்தின் இறுதியில் அந்த முரண்பாடு முடிவுக்கு வந்தது. உலகிலுள்ள வளங்களைப் பங்குபோட்டுக் கொள்வதற்காக உலக நாடுகளுக்கிடையே நடந்த போட்டி, முரண்பாடு, முதல், இரண்டாம் உலகப் போர்களாக வெளிப்பட்டன. போரால் லட்சக்கணக்கான மக்கள் மாண்டார்கள். துயரடைந்தார்கள். போர் முடிந்த பிறகு அந்த முரண் முடிவுக்கு வந்து, வேறு பல புதிய முரண்கள் தோன்றின. அப்படிப்பட்ட உலகு தழுவிய, நாடு தழுவிய முரண்களை இந்நூல் சுட்டிக்காட்டவில்லை. அந்த முரண்கள் தனிமனிதர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் குறிப்பிடவில்லை என்பது ஒரு குறையே. நன்றி: தினமணி, 20/1/2014.
—-
கந்தன் கருணை, ஜி. பாலசுப்ரமணியன், சேது அலமி பிரசுரம், ஜி7, அரவிந்த் நரைன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ.
திருச்செந்தூர் புராணத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூலில் முருகனின் அவதாரம், திருவிளையாடல் மற்றும் பக்தர்களிடம் அவர் காட்டிய கருணை சம்பவங்கள் தொகுக்கப்பெற்று உள்ளன. நூலில் இடம்பெற்றுள்ள சூரசம்காரம் தொடர்பான தகவல்கள் படிப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். நன்றி: தினத்தந்தி, 12/2/2014.