மேஜர் ஜீவா
மேஜர் ஜீவா, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 325ரூ.
கடமை உணர்ச்சி மிக்க நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை கதைத் தலைவனாகக் கொண்ட நாவல். ஊழல்களை ஒழிக்கவும், மக்கள் நலனை பாதுகாக்கவும் அரசியல்வாதிகளுடனும், பணபலம் மிக்கவர்களுடனும் அவர் பெரும் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெறுகிறார். வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நடையில் கதையை நடத்திச் செல்கிறார் எஸ். விஜயராஜ். கதையைப் படிக்கும்போது, ஒரு அருமையான சினிமாப் பாடத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேஜர் ஜீவா, மாவட்ட ஆட்சியர் ஜீவிதா ஆகியோரின் பாத்திரப் படைப்பு அருமை. கதையைப் படிக்கும் அனைவரும் ஒரு நல்ல கதையைப் படித்தோம் என்ற திருப்தியை அடைவார்கள்.
_____
சொல்லப்படவேண்டியவை, கே. நவநீதன், வெளியிட்டோர் – கே.என். பத்மாவதி, 17, ஜனனி பிளாட்ஸ், 313 மாணிக்கம் அவின்யூ, டி.டி.கே.சாலை, சென்னை 18, விலை 100ரூ.
இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில் மனிதனின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் மனதை பற்றி தொடக்கத்தில் விவரிக்கும் இந்நூல், இயல்பு வாழ்வில் அறிவியலின் கோட்பாடுகள் சார்ந்த நிகழ்வுகள் கலந்து இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. விண்வெளியின் நிகழ்வுகள் முதல் செவ்வாய்கிரக ஆய்வு வரை அறிவியல் ஆராய்ச்சி விந்தைகளை பட்டியலிட்டும், உலக போர்களில் நடந்த சில கொடூர நிகழ்வுகளையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கொட்டிக்கிடந்த மகிழ்ச்சி புதையல் என்ற கட்டுரை மூலம் இன்றைய உலகின் ஏக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13 பிப்ரவரி 2013.