பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் அகநி வெளியீடு, விலை 300ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html
கி.பி. 1214க்குரிய செப்பேடு ஒன்று திரிபுவனம் கோயிலில் இருப்பதாக, அங்கே அறங்காவலராக இருந்த பெண்மணி ஒருவர் கோயம்புத்தூர் கே.வி. சுப்ரமணிய அய்யர் என்ற செப்பேட்டு ஆய்வாளருக்குத் தெரிவித்தார். உரியவர்களின் அனுமதி பெற்று, தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் ஒன்பது ஆண்டுகள் போராடி அதை 1939இல் படியெடுத்துத் தந்தார்களாம். இப்படியே ஒவ்வொரு செப்பேட்டுத் தொகுதியையும் ஆய்வாளர்கள் தேடித் தேடிப் படியெடுத்திருக்கிறார்கள். செப்பேட்டில் தானம் பெற்றவர்களின் உறவு முறை பற்றிச் சுவையான செய்திகள் உண்டு. திருத்தகப்பனார், அண்ணார் என்பது போலவே மகனைப் பிள்ளையார் என்றும் வயதான காலமாகிவிட்ட பெரியவர்களை பெரிய தேவர், பெரியநாயனார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாண்டிய நாட்டுச் செப்பேடுகள் இருபத்தைந்தை ஆராய்ந்து அரிய கருவூலமாக வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். பாண்டிய மன்னர்களின் உருவப்படங்களை எவ்வாறோ ஊகம் செய்து அற்புதமான சித்திரங்களாக்கிக் காட்டியிருப்பவர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனோ, பாண்டியன் முடத்திருமாறனோ எப்படியிருப்பார் என்று அறிய விரும்பினால் மருதுவின் சித்திரங்கள் காட்டும். ஆங்காங்கே அரிதான பல சிற்பத் திருமேனிகளின் ஒளிப்படங்களையும் காலக் குறிப்போடு வெளியிட்டிருப்பது கூடுதல் சிறப்பு. பாண்டியர்களின் வரலாறு என்ற தலைப்பில் எழுதியுள்ள 54 பக்கக் கட்டுரை இந்நூலின் மகுடச் சிறப்பாக விளங்குகிறது, நன்றி: கல்கி, 10 மார்ச் 2013.