வலை உணங்கு குருமணல்

வலை உணங்கு குருமணல், மு. புஷ்பராஜன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்கங்கள் 184,விலை 140ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-197-4.html

குருமணல் சுவடுகள் புலம்பெயர்ந்து போன ஈழத தமிழருக்கு நூல்கள்தான் தமது நிலத்தைக் காட்டுகின்றன. தன் கண்ணீராலும் பட்டினியாலும் எம்மை வளர்த்த அம்மாவிற்கு என்று புஷ்பராஜன் இந்த நூலை எழுத ஆரம்பிக்கும்போதே மனது வலிக்கிறது. இது வெறுமனே மு. புஷ்பராஜனுடைய அம்மாவை மட்டுமல்ல. அந்த குருநகர் என்ற யாழ்ப்பாணத்து மீனவக் கிராமத்தின் எல்லா ஏழை அம்மாக்களையும் கண்ணுக்கு முன்னால் அவர் நிறுத்துகிறார்.  

  ஈழத்தின் வட புலத்தில் மிக முக்கியமான குருநகர் என்ற மீனவக் கிராமத்தின் இன வரைவியல் குறிப்புதான் இந்த வலை உணங்கு குருமணல் என்ற நூல். உணங்கு என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்று பலர் என்னிடம் கேட்டார்கள். அது எமது தமிழ் கிராமங்களில் பேச்சு வழக்கில் இருக்கின்ற உணத்துதல் (காயப்போடுதல்) என்ற சொல். ஈழத்து தமிழ் சமூகங்களைப் பற்றிய சமூகவியல், இன வரைவியல் ஆய்வுகள் போதுமான அளவில் வரவில்லை. தென்னிலங்கை சமூகங்கள் குறித்து ஒப்பீட்டுரீதியில் முக்கியம் வாய்ந்த சமூகவியல் ஆய்வுகள் காணப்படுகின்றன. அதிலும் சிங்களர்கள் தங்களை மண்ணின் மைந்தர்கள் என்று காட்டிக்கொள்ளவும் ஈழத் தமிழர்களை வந்தேறு குடிகள் என்று காட்டிக்கொள்ளவும் பகீரத முயற்சிகளை செய்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். கல்விப் பின்புலம் கொண்ட யாழ்ப்பாணத்தில் மருத்துவம், பொறியல் போன்ற துறைகளில் காட்டப்பட்ட ஆர்வம் சமூக ஆய்வில் காட்டப்படாமை முக்கிய குறைபாடு மு. புஷ்பராஜன் தனது நூலில் குருநகர் மீனவ சமூகத்தின் வாழ்வியல் முறைமைகள் குறித்த சிறந்த இனவரைவியல் பதிவினை தந்திருக்கிறார். குருநகர் மீனவ மக்களின் வாழ்க்கை முறை, தொழில்முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மத வழிபாடுகள், அவர்களுக்குள் சண்டை வந்தால் எப்படி கையாளுவார்கள் என்ற விடயங்களை மிக விரிவாகவும் தகவல்களோடும் எழுதியிருக்கிறார். இலங்கையின் வடக்கு, கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற கத்தோலிக்க மீனவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக குருநகர் யாழ்பாணக் கிராமத்தில்தான் வாழுகின்றனர். அங்கு பிறந்து வளர்ந்து படித்து தொழில் செய்த புஷ்பராஜன் தனது சொந்த கிராமத்தை ஆய்வு ரீதியில் பார்த்திருக்கிறார். ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, அரசியல் கட்டுரையாளராக, பன்முக ஆற்றல் கொண்ட மு. புஷ்பராஜன் அலை சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர். குருநகர் மக்கள் கடின உழைப்புக்கு பெயர்போனவர்கள். தினமும் இயற்கையோடு போராடிப் போராடி திரண்டிருக்கும் புஜ வலிமை படைத்தவர்கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் அதே வேளை பகையை மனதுள் புதைத்து வைத்திருக்காமல் வாரி எடுத்து வெளியே வீசி மறந்துவிடும் இயல்பினர். இறுக்கமான குடும்ப உறவுகளுக்கு நிகரான இறைபக்தியும் கொண்டவர்கள். அசாதாரண இயல்புகளோடு வாழ்ந்த ஒரு சமூகக் குழுவின் வாழ்வியல் தடயங்களை பதிவு செய்கிறது நூல். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுக்க சிதறி வாழ்கிறார்கள். அடுத்த தலைமுறை இலங்கைத் தீவில் இருந்து தாங்கள் வந்தவர்கள் என்பதனை நம்ப மறுப்பார்களோ எனும் அச்சம் இருக்கிறது. குருநகர் என்ற கிராமத்துக்குள் எவ்வளவு செய்திகள் புதைந்து கிடக்கின்றன? வட இந்திய குரு வம்சத்தோடு தொடர்புகொண்ட தென்னிந்திய பாண்டவ அரசர்கள் மகரத்தை (மீனை) தங்களது அடையாளமாக கொண்டதால்தான் மீனவன் என்று அழைக்கப்பட்டனர் எனக் குறிப்பிடும் புஷ்பராஜன், குருநகர் மக்கள் தமது கொடியாக மகரக்கொடியை கொண்டுள்ளனர் என்கிறார். குருநகர் மீனவ பெண்கள் தமக்கிடையே நிகழும் சண்டைகளில் தம் மார்புகளில் அடித்துக்கொண்டு நான் குருகுல ராசாத்தி என்று கூறிக்கொள்வதையும் ஏதோ ஒரு வகையில் இந்திய குருவம்சத்தோடு குருநகரின் பூர்வீகம் தொடர்பு கொள்வதையும் அவர் சுவையாக விவரிக்கிறார். இந்நூலின் போர் மேகங்களின் பின்னால் என்ற பகுதி முக்கியமானது. சிங்களப் பேரினவாதமும் அதன் எதிர் முகமான ஈழ விடுதலை இயக்கங்களும் குருநகரின் வாழ்வை சிதைத்துவிட்டதை சோகத்துடன் பதிவு செய்கிறார். இந்த சோகம் வடக்கு, கிழக்கு தமிழ் கிராமங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. யுத்தம் இப்பொழுது முடிந்துவிட்டாலும் தம் பிள்ளைகளை இழந்த வீடுகள் இப்பொழுதும் சோகத்தில் இருக்கின்றன. அவர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்துவதற்கும் இராணுவம் தடை விதித்துள்ளது. அவர்கள் மௌனமாக விக்கித்து அழுகிறார்கள். இந்நூல் குருநகரைப் பற்றிய பல சுவையான தகவல்களோடு, மீனவர்களின் அம்பா பாடல்கள், அவர்களிடையே பேசும் கலைச்சொற்கள் என்று பல ஆய்வுக்குரிய விடயங்களை சுமந்து வந்திருக்கிறது. யாழ்ப்பாண மீனவ கிராமத்தினை முழுமையாகப் பார்க்க இந்த நூலினை படிக்க வேண்டும். -இளைய அப்துல்லாஹ். நன்றி : இந்தியா டுடே, 20 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *