பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html

பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. ஞானரதம் என்னும் கற்பனை உலக சிந்தனையை உள்ளடக்கிய கதை என, பல கதை நூல்களின் ஒரே உருவமாக அமைந்துள்ளது இந்த நூல். களஞ்சியத்திலிருந்து தானியத்தையோ, பொன்னையோ தேவைக்கு ஏற்ப எடுத்துப் பயன்படுத்துவதுபோல், இந்த பாரதியார் கதைக் களஞ்சியத்திலிருந்து தேவையான கதையை தேவைப்படும் நேரத்தில் , படித்து பயன்பெறலாம். – முகிலை இராசபாண்டியன்.

கம்பனும் ஆழ்வார்களும், முனைவர். ம. பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், 48, தானப்ப முதலித் தெரு, மதுரை – 625001,  பக்கங்கள் 312, விலை 180ரூ.

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்ற நம்மாழ்வார் கூற்றிற்கு ஏற்ப, இன்று தமிழகத்தில் கம்பன் கழகங்கள், பல ஊர்களில் ஏற்பட்டு, கம்பராமாயணக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. அத்தகு பெருமை வாய்ந்த கம்பனுக்கு, ஆழ்வார்களின் பாசுரங்கள், உந்து சக்தியாக இருந்து உதவியுள்ளன என்று விரித்துரைப்பதே, இந்நூலின் நோக்கம் ஆகும். இந்நூலில் எட்டுத் தலைப்புகளில் நூலாசிரியர் மிக அருமையாக தம் கருத்துக்களை கூறியுள்ளார். முதல் ஆறு தலைப்புகளில், பன்னிரு ஆழ்வார்கள் பாசுரங்களின் சாயல், கம்பரிடம் அமைந்துள்ளதை விவரிக்கிறார். கம்பனை, வைணவ உரையாசிரியர்களுடன் ஒப்பிட்டும், கம்பனின் வளர்ச்சி பற்றியும், பின்னிரு தலைப்புகளில் விவரிக்கிறார். மொத்தத்தில் அணிந்துரை அளித்துள்ள, அறிஞர் தெ. ஞான சுந்தரம் அவர்கள் கூறியுள்ளதுபோல, கம்பன் எனும் கங்கை, ஆழ்வார்கள் பாசுரங்கள் எனும் யமுனை, உரையாசிரியர்களின் குறிப்புகள் எனும் சரஸ்வதி ஆகிய மூன்றும் கலந்து ஓடும், இலக்கியத் திருமுக்கூடல் இந்நூல். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 03 மார்ச், 2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *