தமிழ் வளர்த்த தமிழர்கள்
தமிழ் வளர்த்த தமிழர்கள், தா. ஸ்ரீனிவாசன், மகா பதிப்பகம், 3, சாய் பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, பக்கங்கள் 144, விலை 60ரூ.
தமிழ்த்தாத்தா உ.வே.சா. தொடங்கி பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி, டாக்டர் மு.வ., என பத்து சிறந்த தமிழ்த்தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப் பாராட்டப்பட வேண்டும். நல்லறிஞர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம். – ஜனகன்.
தமிழில் திணைக் கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக்கங்கள் 126, விலை 80ரூ.
திணை என்ற சொல் வீடு, நிலம், திண்ணை, இடம், குடி, குலம், ஒழுக்கம், பாடல், சூழமைதி, ஐந்திணை ஆகிய பத்துப் பொருள்களில் வரும் எனப் பட்டியலிடும் நூலாசிரியர். அகமும், புறமுமாய் அமைந்த சங்க இலக்கியத்தை திணைஇலக்கியம் என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று உரைக்கின்றனர்.சங்க இலக்கியம் தவிர மணிமேகலை காப்பியம் இலக்கியத்தில் நவீனத்துவம், தலித்திய வாசிப்புகள் தமிழ் நாவல்கள் எதிர் கொள்ளும் வடிவ மாறுதல்கள் சங்க இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் போன்ற தலைப்புகளில் 11 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், சில குறிப்பிட்ட படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் முன்னிறுத்தி மேலோட்டமாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளின் பொருளடக்கம், இன்னும் அழுத்தமாக இருந்தால், பல விதமான ஆய்வாளர்களுக்கும் பயன்படும். – பின்னலூரான். நன்றி: தினத்தந்தி 3, மார்ச் 2013.