ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்சிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி. லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோயில் – 629001, விலை 250ரூ. இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-797-0.html
அழிவின் சாட்சியம் இலங்கை முள்ளிவாய்க்காலின் மணலில் ஒரு போராட்டம் சுத்தமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டது. அதன் நினைவுச் சுவடுகளுக்குக் கூட அங்கு இடமில்லை. அதுவொரு சாட்சியமற்ற போராகத்திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதன் எதிரொலிகள் உலகமெங்கும் ஓயாது கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இப்புத்தகம். அப்போரில் தப்பிப்பிழைத்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் கதைகளை அவர்கள் புலம் பெயர்ந்து சென்ற இடங்களில் அவர்களைச் சந்தித்து சேகரித்திருக்கிறார் ஃபிரான்சிஸ் ஹாரிசன். பிபிசியின் முன்னாள் இலங்கைச் செய்தியாளரான இந்த பெண்மணியின் பார்வை எப்பக்கமும் சாராத ஒரு வெளிநபரின் பார்வை. இலங்கை பேரினவாத அரசின் மீதும் புலிகளின் மீதும் இந்த நூலில் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஐ.நா மட்டுமல்ல உலகமே கைகளைக் கட்டிக்கொண்டு இந்த படுகொலைகளை வேடிக்கைப் பார்த்தது பற்றி வட இலங்கையில் கொலைகள் நடந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கையின் கடற்கரைகளில் வெயில் காய்ந்த உல்லாசப் பயணிகள் பற்றி பல சித்திரங்களை இந்த நூலில் அவர் வரைகிறார்.

பெட்டி படுக்கைகளைக் கட்டிக கொண்டு ஐ.நா வெளியேறத் தயாரானபோது அங்கிருந்த அரைவாசி சனங்கள் தங்கள் அடுத்த வேளை உணவுக்காக ஐ.நாவையே நம்பியிருந்தார்கள் என்ற ஒரு வரிபோதும், நூலை வாசிப்பவர்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதற்கு. இறுதிகட்ட அழிப்பு வேலை நிகழ்வதற்குமுன்பாக அங்கிருந்த சாட்சிகள் அனைவரையும் இலங்கை அரசு வெளியேற்றி இருந்ததை ஓர் ஐ.நா சேவைப்பணியாளரின் மூலமாக விவரிக்கிறார். செய்தித் தொடர்பாளர் என்ற தலைப்பில் வரும் புலித்தேவனைப் பற்றிய கட்டுரையும் அவரது இறுதிநாட்கள் பற்றிய விவரணையும் உருக்கமானவை. யாரும் உதவப்போவதில்லை என்று தெரிந்தும் அவர் தன் இருப்பை உணர்த்த இறுதிநாட்களில் அனைவருடனும் பேசிக்கொண்டே இருந்தார் என்கிறார். இன்னும் முள்ளிவாய்க்காலில் இறுதிநாட்களில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் சரியாக வெளிவரவில்லை என்பதையே இக்கட்டுரை காட்டுகிறது. களத்தில் இருந்த ஒரு மருத்துவர் ஒரு கன்னிகாஸ்த்ரீ, ஒரு ஆசிரியை, ஒரு போராளி என தப்பிப் பிழைத்த பலரையும் சந்தித்து அவர்களின் கதையைச் சொல்கிறார். இந்தக் கதைகள் மூலமாக இலங்கைத் தமிழனின் அவலம் அவன் போர்முனையில் பிணமாக விழுவதிலிருந்து தப்பியபின்னும் தொடர்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தமிழ்நாட்டுத் தமிழனாக இந்த மொழிபெயர்ப்பு நூலைப் படிப்பவர் எவருக்கும் கண்ணாடியில் காணும் தன் பிம்பத்தை தன் கையாலாகத் தனத்துக்காக நிச்சயம் ஒருகணமேனும் காறி உமிழத்தோன்றும். இந்த ஆங்கில நூலை அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரான என்.கே. மகாலிங்கம். நன்றி: அந்திமழை பிப்ரவரி 2013.