யாருடைய எலிகள் நாம்?
யாருடைய எலிகள் நாம்?, துளி வெளியீடு, சென்னை, விலை 300ரூ.
பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். பத்திரிகைகளில் எழுதப்படும் எல்லாக் கட்டுரைகளும் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவையாகவோ, தேவையற்றவையாகவோ ஆகிவிடுவதில்லை என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. தமிழக அரசியல், ஈழப்பிரச்சினை, சாதியம், ஜனநாயகம், சுதந்திரம், வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், ஊடக நெறிகள், மருத்துவம், பாலினம், பாலியல் என வீச்சும் விரிவுமிக்க களங்களில் இறங்கி, நூலாசிரியர் சமஸ் எழுதியுள்ள சூழலியல் கட்டுரைகள் ஒரு சமகால வரலாற்றுக் களஞ்சியத்தைப் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 7/1/2015.
—-
திருக்குறள் ஆய்வுரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 440ரூ.
திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. இதனால்தான் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமிதம் கொள்கிறார் பாரதியார். திருக்குறளுக்கு இதுவரை எத்தனையோபேர் தெளிவுரைகளையும், விளக்கவுரைகளையும் வழங்கியுள்ளனர். அந்த வகையில் டாக்டர் எஸ்.ஆர்.கே. திருக்குறளுக்கு புதிய முறையில் ஆய்வுரை எழுதி இருக்கிறார். வள்ளுவரின் காலம், அவரது சமயம், சமுதாயச் சூழல் போன்றவற்றை பல்வேறு ஆதாரங்களுடன் ஆராய்ந்துள்ளார். மேலும் 1330 குறளுக்கும் புதிய கோணத்தில் பொருளும், விளக்கமும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 7/1/2015