யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ.
யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, கோவில்களுக்குச் செல்வது, இறை தரிசனம் செய்வது, தியானத்தில் ஆழ்வது, சாதுக்களைச் சந்தித்து உரையாடுவது, தத்துவ நூல்களை வாசிப்பது என, தனி பாதையில் சென்றார். 1943ல் அவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தபோதும், அவரது உள்ளம் ஆன்மிகத்திலேயே நாட்டம் கொண்டது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையை வாசித்த ராம்சுரத் குன்வர், கபாடியா பாபா எனும் சாது மூலம், அரவிந்தர், ரமன மஹரிஷியைக் கேள்வியுற்று, அவர்களைச் சந்திக்க தென்னிந்தியா வந்தார். ரமண மஹரிஷியை தன் குருவாக ஏற்றுக்கொண்ட ராம்சுரத் குன்வர், ராம் சுரத்குமார் என, அழைக்கப்பெற்றார். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவைக் கேட்டு, அவரது நூல்களைப் படித்து பரவசப்பட்டார். மக்களிடையே நிலவும் அறியாமையைப் போக்குவதுடன், அவர்களிடம் பக்தி உணர்வை மேம்படுத்துவதே தன் தலையாய பணி என்பதை உணர்ந்துகொண்டார். சிக்கேறிய தலை, அழுக்கு உடம்பு, கிழிந்த ஆடைகள், கந்தல் சால்வையுடன் இவர் தோற்றம் இருந்தாலும், முகத்தில் தேஜஸ் சுடர்விட்டது. திருவண்ணாமலையில் பல்வேறு அவமானங்களையும், இன்னல்களையும், தாக்குதல்களையும் சந்தித்தாலும், அவற்றையெல்லாம், அன்பு நெறியில் பொறுத்துக்கொண்டு, ஞானியாக உயர்ந்தார். ட்ருமன் கேய்லர் வாட்லிங்டன், லீலோ ஸோவிக் போன்ற வெளிநாட்டு பக்தர்களும், தமிழறிஞர்களான தெ.பொ.மீ., அ.ச. ஞான சம்பந்தன், வித்வான் வே. லட்சுமணன், பிரமிள், பெரியசாமிதூரன், எழுத்தாளர் பாலகுமாரன் போன்றோர், யோகியாரின் மெய்யன்பர்களான நிகழ்வுகளும், பக்தர்களுக்கு அருள்பாலித்த அற்புதங்களும், இந்நூலுள் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன. யோகியாரின் கட்டளைப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை கிரிவலம் வந்து பயன்பெற்றுள்ளனர். யோகி ராம் சுரத்குமார் பற்றிய முழுமையான வரலாற்று நூல். -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 13/12/2015.