ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள்
ராஜாஜியின் ஆங்கிலப் பேருரைகள், தமிழாக்கம் த.கணேசன், த.க. அகிலா, பாரதிய வித்யாபவன், லட்சுமிபுரம் தென்னூர், திருச்சி 17, விலை 125ரூ.
ராஜாஜி தேசத்தந்தை காந்தியின் மனசாட்சி. தமிழர் தலைவர் பெரியாரின் அன்பான எதிரி. இந்தத் தேசத்தின் விடுதலை வேள்விக்கு விறகு சுமந்தவர். அதேநேரத்தில் இந்தியா பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது என்று கணித்தவர். தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம் கால் ஊன்ற உழைத்தவர். அவரேதான் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணாவுடன் கைகோத்தவர். மேலாட்டமாகப் பார்த்தால் ராஜாஜி, முரண்பாடானவராகத் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், அவரது தீர்க்கத்தரிசனம் புலப்படும். அத்தகைய மூதறிஞரின் பேச்சுத்தொகுப்பு இது. 1949முதல் 1954 வரையிலான ஆண்டுகளில் ராஜாஜி பேசிய ஆங்கிலப் பேரூரைகள், அவரது இயல்பான தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ராஜாஜிக்கே உரித்தான பிரத்யேகக் குணங்களில் ஒன்று. யாருக்காகவும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் தனது கருத்தைச் சொல்வது. காந்தி இறந்து ஓர் ஆண்டு கடந்துவிட்ட நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்குப் போன ராஜாஜி, அழுவதை நிறத்துங்கள் என்று அறிவுரை சொல்கிறார். நாம் தொடர்ந்து வருந்துவதால் எந்தப் பயனும் இல்லை. வருத்தம், சோகம் முடிந்த முதலாம் மாதத்துக்குப் பிறகு யாரும் அழக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்று சொல்லும் துணிச்சல் ராஜாஜிக்கு மட்டுமே உண்டு. விழா, கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் பயன் இல்லை என்றும் அவரே சொல்கிறார். மற்றவர்களின் தவறுகளை நாம் எண்ணிப் பார்க்காமல் ஒவ்வொரு மனிதனும் நல்லவராக வாழ முயற்சிக்க வேண்டும். நல்ல மாவுபோல் இருந்தால், அரசாங்கம் நல்ல லட்டு தரும். மக்கள் சோம்பேறிகளாக இருந்தால் அரசாங்கமும் மோசமானதாக இருக்கும்-வெறுமனே ஜெயந்தி கொண்டாடுபவர்களை இப்படி நறுக்கென்று கொட்டவும் செய்தார் ராஜாஜி. சினிமா, கேளிக்கைகள், நடிகர்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாத ராஜாஜியை, சௌத் இண்டியன் ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் விழாவுக்கு அழைத்துள்ளனர். அங்கும் அவர்களை மகிழ்விக்க ராஜாஜி பேசவில்லை. தெருவில் நடந்து செல்லும் ஒவ்வொருவரும் சினிமா பற்றியே தொடர்ந்து சிந்தித்து வந்தால், மற்ற பல விஷயங்களில் நாம் எந்த வகையில் முன்னேற்றமடைய முடியும்? எனவே அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும். நீங்கள் தயாரிக்கும் சினிமாப் படங்கள் மனிதர்களின் காம இச்சையை அதிகப்படுத்துகின்றன என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார். அணுசக்தியை அழிவு சக்தியாக 50 ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டிப் பேசி இருக்கிறார். அணுசக்தி மூலம் பல சிறந்த நன்மைகளைப் பெறலாம் என்று அரசாங்கத் துறைகள் பேசுவது இப்போதைய நிலையில் பொருத்தம் அற்றது. உலகத்தில் அணு ஆயுதத்துக்கு எதிராகக் கருத்துக்கள் உருவாகிக்கொண்டு இருப்பதற்கு, அவை சமாதானமாக ஆற்றுப்படுத்தும் வாசகம் மட்டுமே என்று ரகசியம் உடைக்கிறார் ராஜாஜி. என்றோ பேசியவை, எப்போதுமே பேச வேண்டியவையாக இருப்பதே ராஜாஜியின் தீர்க்க தரிசனம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 7/10/2012.