ரோஜா நிறச்சட்டை
ரோஜா நிறச்சட்டை, அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-0.html அன்றாடத்தின் கதைகள் ஆசிரியரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. புரியாத பிரச்சினை கதையில் இன்றைய தவிர்க்க முடியாத இருபாலர் கல்வி, தலைமுறை இடைவெளி போன்ற விவகாரங்கள் அலசப்படுகின்றன. மற்ற ஆடவருடன் யதார்த்தமாக மகள் பழகுவதைப் பார்த்து தந்தை பதறுகிறார். சந்தேகிக்கிறார். கடன் கொடுத்தவன் கலங்கும் விதம் சொல்கிறது இருபது ரூபாய் கதை. துக்கடா விஷயங்கள் என்று நாம் கருதுபவை, மனதின் நிம்மதியை எப்படிக் காவு வாங்குகின்றன என்று ஆசிரியர் சொல்ல முயன்றிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் சென்னையில் பிரபலமாகத் திரிந்த பீரோ புல்லிங் திருடனைப் பற்றி விவரிக்கிறது அப்பா படித்த நியூஸ்பேப்பர் கதை. பத்திரிகைச் செய்தி பாணியில் ஆசிரியர் கதையை உருவாக்கியிருக்கிறார். செய்தியைக் கதைபோல் சொல்வது மாதிரியான ஒரு உத்தி. ஹலோ ஒரு சுவையான கதை. பேத்தியிடமிருந்து தாத்தா நாகரீகம் கற்றுக்கொள்ளும் விதம் ஜோர். மெல்லிய நகைச்சுவை இழையோட அழகியசிங்கர் கதைசொல்கிறார். பெரிய விவாதக் கருவை ஒன்றிரண்டு வாசகங்களில் சொல்ல முயற்சிக்கிறார். கூடவே பயம், தனிமை, வயோதிகம், வியாதி போன்றவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிலைமைகள் என கோடிட்டுக் காட்டுகிறார். – ஸ்ரீதர் சர்மா. நன்றி: தி இந்து, 25/10/2014.