வடநாட்டு கோயிற்கலைகள்
வடநாட்டு கோயிற்கலைகள், கோ. வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ.
கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும், அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இயற்கையான குகை பொந்தில் அடைக்கலமான மனிதன், வீட்டை எவ்வாறு கட்டினான், கோயில்களை எவ்வாறு கட்டத் தொடங்கினான் என்று யோசிப்போருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும். வரலாறு படிப்பவர்களும், ஆசிரியர்களும், ஆராய்ச்சியில் ஈடுபடுவோரும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினமணி, 24/9/2012.
—-
கடைசிப்பக்கம், நிதர்ஸனா, மணற்கேணி, புதுச்சேரி 605008, விலை 90ரூ.
குங்குமம் இதழில் வெளியான கடைசிப்பக்க கதைகள் முதல் முறையாக நூல் வடிவம் பெற்றிருக்கிறது. மனித இனம் நாடோடிகளாக அலைந்து திரிந்த காலம் தொட்டு கம்ப்யூட்டர், ஐபாட், இரீடர் என நவீனங்கள் கோலோச்சும் காலம் வரைக்கும் அழிவின்றி நீள்கின்றன நீதிக்கதைகள். பொதுவில், நீதிக்கதைகள் குழந்தைகளுக்கானவை என்ற பிம்பம் நம்மிடம் உண்டு. உண்மையில் பெரியவர்களுக்குத்தான் அதன் தேவை அதிகமிருக்கிறது. குங்குமம் இதழில் கடைசிப்பக்கம் லட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள அதுவே காரணம். சுகமான ஒரு குட்டிக் கதையின் பின்னணியில் அழுத்தமான ஒரு நீதியை இணைத்து, நொடிப்பொழுதில் வாசகனை திளைக்கச் செய்யும் 145 கதைகளை நூலாக்கியிருக்கிறார்கள். தனித்தனியாக படித்தவற்றை ஒருசேரப் படிக்கும்போது ஈர்ப்பு இன்னும் அதிகமாகிறது. நன்றி: குங்குமம், 22/10/2012.