பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ.
தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் வாசகனுக்கு ஆண்கள் என்றால் இவ்வளவு வக்கிரமிக்கவர்களா? இவர் ஏன் இப்படி சித்தரிக்கிறார்? போன்ற கேள்விகள் எழும். இக்கதைகள் ஏதோ ஒரு நோய்க்கூறு தன்மையை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகிறது. கதை நிகழும்போதே ஏதோ ஒரு ரகசிய இடத்திலிருந்து ஓர் ஆண் வெளிப்பட்டு அவளை நசுக்கப் போகிறானோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன கதைகள். அவளுடைய உறவுச் சிக்கல் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் கதையில் அழுத்தமாகப் பதியப்பட்டும் உள்ளது. இக்கதைகளைத் தாண்டி, கழிப்பறை இல்லாத கிரமாத்தில் பெண்கள் படும் சிரமங்களைப் பேசும் வெளியே, இரண்டாம் தாரமாக வந்து சேரும் பெண்ணின், அவளின் குழந்தைகளின் துயரத்தை சித்திரிக்கும் பிள்ளைக் கனியமுதே, ஊதாரியான 4 பிள்ளைகளையும் வெட்டிக்கதை பேசும் கணவனையும், நிலத்தையும் தாங்கும் பேசும் கணவனையும் நிலத்தையும் தாங்கும் பெண்ணின் வலிமையை பேசும் ஒரு நெல்லுச்சோறும் சில தண்ணீர்ப் பாக்கெட்டுகளும் இத்தொகுப்பில் குறிப்பிடத் தக்க கதைகள். மேலும் இன்றைய நவீன முகநூல் வாழ்வை கிண்டலுக்குள்ளாக்கும் ஓர் எழுதுகோலும் சில திருவிளையாடல்களும் கதை இவருடைய புனைவுத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமணி, 17/3/2014.
—-
கேப்டன் கூல் டோனி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2 வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 115ரூ.
இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் டோனியை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. டோனியின் இளமை பருவம், கால்பந்து கோல் கீப்பராக இருந்த அவர், கிரிக்கெட்டிற்குள் நுழைந்தது எப்படி? உலக கோப்பை வெற்றியின் ரகசியம், காதல் அனபவங்கள், அவருக்கு பிடித்தமான விஷயங்கள் ஆகியவற்றை ரசிக்கும்படி விளக்கியுள்ள ஆசிரியர், டோனி மீது எழுந்த சர்ச்சைகள் மற்றும் சரிவுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. நன்றி: தினத்தந்தி, 19/3/2014