வந்தாராங்குடி
வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். நெல் ஆவாட்டி ஆக்க, அவல் பதம் பார்த்துக் கூட்ட, கம்பு கொங்கை அடிக்க, தூற்ற, தாத்த, நோம்ப, புடைக்க, தரிக்க, தெள்ள, இடிக்க, மழுக்க, குற்ற… போற எடத்துல எதியும் ஆத்தா கத்துக் குடுக்கலியான்னு நொட்டுச் சொல்லு சொல்லக்கூடாது, என்னாடி எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது எலிப் புழுக்க எதுக்கு காயுதுங்கற மாதிரி மொட்ட வெயில்ல நிக்கற… -இப்படி நகரமயமாகிவரும் வாழ்க்கைச் சூழலில் குறிப்பாக நடுநாட்டு வட்டாரத்தில் மறைந்துபோன, மறந்து போன, மறைந்து வருகிற பற்பல வார்த்தைகள், சொலவடைகள், சொற்கோவைகள், சமூக வழக்கங்கள், வழக்காறுகள், சடங்குகள், சிறு தேவதை வழிபாடுகள், படையல்கள் இவை தவிர இளந்தலை முறையால் அடையாளம் காண முடியாத கருவிகள், மாவடை மரவடைகள், வெள்ளாமை விவரங்கள் ஆகியவை இந்நாவல் நெடுகிலும் விரவிக்கிடக்கின்றன. பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளைப் பார்த்து ஆத்துப் பாசனத்துல வயக்காடு வாங்கி வச்சிருக்கமுன்னு எங்க நாக்குல தேனத் தடவி இட்டுக்கிட்டுப் போயி உர்ணானூறு பீக்கருவ முள்ளுற ஏறங்கினிங்கள, செத்தமா பொழைச்சமான்னு ஒருபய இது நாளுவரைக்கும் எட்டிப் பார்த்தீங்களா. மொச வவுத்துல அடி வைக்கிறமாதிரி பொச பொசன்னு கொல்லக்காடு. ஓங்கிட்ட வுட்டுட்டு நாங்க கருவுட மண்ணுல கருவ முள்ளுல சிக்கி, குடிக்கிற தண்ணிக்குக்கூட வழியில்லாம செத்து மடியிறம் என ஆவேசமாகப் பேசுகிறாள் நிலம் கொடுத்தவள். இந்த நாவலின் கதை மாந்தர்கள் அரிதாரம் பூசிக் கொள்ளாமல் இயல்பான முகங்களோடு உலா வருகிறார்கள். ஆழமாக வேர் ஊன்றி அகலமாய் கிளை பரப்பி தம் மண்ணோடு ஓன்றிவிட்ட மக்களின் வாழ்க்கை முறையினை, விறுவிறுப்பாக மண்வாசனை கமழ எழுதியுள்ளது மட்டுமின்றிச் சமகால சமூக, அரசியல் நிகழ்விகளையும் போராட்டங்களையும் தயக்கமின்றி நாவல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். தமிழ் நாவல் உலகில் வந்தாரங்குடிக்கு நிரந்த இடம் உண்டு. இந்நாவல் விருதுகளால் கௌரவிக்கப்பட வேண்டியது என்று சொன்றால் அது மிகையில்லை. -சி. தனவேல், இ.ஆ,ப. நன்றி: அந்திமழை, 1/6/2014.