வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ.
ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள், ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட கருத்துக்களை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஒரு வித்தியாசமான ஆன்மிக உணர்வை அனுபவிக்க விரும்பும் வாசகர்கள் படிக்க வேண்டிய நூல். -கேசி.
—-
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும் பெருவாழ்வு, ராபின் ஷர்மா, ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், போர்ட், மும்பை 400 001, பக். 247, விலை 160ரூ.
முப்பது நாட்களில் மொழிகள் கற்கும் நூல்கள் பலவற்றை நாம் கண்டதுண்டு, ஆனால் இந்த நூல் 30 நாட்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து, பெருவாழ்வு வாழலாம் எனக்கூறி, அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது. நம்புவது முதலில் சிறிது கடினமாக இருப்பினும், இந்த நூலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட இது கூறும் உயரிய செய்திகளை, நமது அன்றாட செயல்களை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதை விவரிப்பதை அறிய அறிய நம்முள் நம்பிக்கை பலமாக எழுகிறது. வாழ்வின் ரகசியங்களை 10 ஆண்டுகள் ஆராய்ந்து, வெற்றிக்கான வழிமுறைகள் துல்லியமாகப் பட்டியலிட்டு, இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியுள்ளார் ராபின் ஷர்மா. உங்கள் கனவுகள் யாவையும் மெய்ப்பட வைப்பதற்கான நம்ப முடியாத சக்தி உங்களுக்குள் இருக்கின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். இந்த நூலை வாசித்து முடிக்கையில் மனவளம் கூட்டும் அருமையான சுயமுன்னேற்ற நூல். -கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர், 9/10/2011.