வள்ளலாரின் தமிழ் மருத்துவம்

வள்ளலாரின் தமிழ் மருத்துவம், ப. இராதா, நாகா பதிப்பகம், புதுச்சேரி, பக். 98, விலை 90ரூ.

முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டை புத்தகமாக மாற்றியிருப்பதால் ஒரு வாசகனிடமிருந்து இந்நூல் அந்நியப்பட்டுவிடுகிறது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பேராசிரியர் குழுவுக்குப் புலப்படச் செய்வதற்கும், ஒரு வாசகனுக்கு விளங்கச் செய்வதற்கும் இந்த புத்தகத்தை கொஞ்சம் மாற்றி எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதைச் செய்யாததால் இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரையின் அச்சுப் பிரதியாக மட்டுமே உள்ளது. வள்ளலாரின் பேச்சில் பாடல்களில் இடம்பெறும் கீரைகள் மலிகைகளைக் குறிப்பிட்டு அதன் பயன்களை விளக்கிச் சொல்கிறது நூல். வள்ளலார் தனது உரைகளில் வாழ்க்கை முறை குறித்து நிறையவே பேசியிருக்கிறார். எப்படி உண்ண வேண்டும். எந்தெந்த நேரத்தில் எவையெவை சரியாக இருக்கும், எப்படி படுக்க வேண்டும் என்பதையெல்லாம்கூட பேசியிருக்கிறார். ஆனால் அவற்றைப் பற்றி இந்த நூலில் தேடினால் கிடைக்காது. ஏனென்றால் ஆய்வு வரையறைக்குள் அவை இல்லையே.  

—-

 

தேவாரத்தில் தொன்மம் (தேவாரத்தில் காணப்பெறும் சைவம் (சிவபெருமான்) குறித்த முழுமையான விளக்கம் மற்றும் தொன்மக் கலைக்களஞ்சிய நிரல்), வே.சேதுராமன், நான்கு பாகங்கள், சேது பதிப்பகம், 3/52, அக்ரகாரம், திருச்செந்துறை, அந்தநல்லுர் அஞ்சல், ஜீயபுரம், திருச்சி 639101, பக். 2036, விலை ரூ. 1350, மொத்தமாக வாங்கினால் சலுகை விலை ரூ. 1150.

அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்க இயலாத நிகழ்வே தொன்மம். உலக நடப்பியல் நடக்க இயலாத ஒன்று தொன்மம். கடவுள் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தொன்மத்தின்பாற்படும். MYTH என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடித் தமிழாக்கமே தொன்மம். புராணம் என்ற சொல்லின் வேறு பட்ட புதிய திறனாய்வுச் சொல் தொன்மம். இது என்று, எப்போது தோன்றியது என யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. உலகம் தோன்றிய பல ஆண்டுகள் கழித்து அதில் மனித உயிர்கள் தோன்றியபோதே தொன்மமும் தோன்றிவிட்டது எனத் தொன்மத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. சமயக் குரவர் நால்வரில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய முதல் மூவரின் தேவாரப் பாடல்களிலிருந்து சிவபெருமான் தொடர்பான தொன்மங்கள் விளக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் தொன்மமும் இலக்கியமும் பற்றிய விளக்கம், சிவபெருமானின், சிவசக்தியின் (அர்த்தநாரீ) தொன்மங்கள், இரண்டாம் பாகத்தில் கணபதி, முருகன், பிரம்மன், திருமால், இந்திரன், இராவணன், அந்தணர், அடியவர்கள் ஆகியோர் பற்றிய தொன்மக் குறிப்புகள். மூன்றாம் பாகத்தில் சிவபெருமான் பற்றிய 82 தொன்மக் கலைக்களஞ்சிய நிரல், நான்காம் பாகத்தில் கணபதி, முருகன், பிரம்மன், திருமால் ஆகியோர் பற்றிய தொன்மக் கலைக்களஞ்சிய நிரல்களும், பல்பொருள் பற்றிய தொன்மப் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. கடைசி இரு பாகங்கள் தேவாரம் தொடர்பான ஆய்வுக்கு மிகவும் பயன்படக்கூடியவை. இன்றைய புதுக்கவிதைகளில் தொன்மங்கள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். தொன்மங்கள் வாயிலாக சைவம் குறித்தும், சிவபெருமான் குறித்தும் முழுமையாக விளக்கம் தரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும். நன்றி; தினமணி, 11/11/2013.

Leave a Reply

Your email address will not be published.