விட்டு விடுதலையாகி
விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html
ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இந்தப் படைப்பு. ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம். மறுபுறம் அதே காலகட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு. இவை இரண்டும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால், இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் செல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண். நாவலின் உத்தி இவ்வாறு இருக்க, பாத்திரப் படைப்பில் ஆசிரியரின் கைவண்ணம் மிளிர்கிறது. கலைக்கான அர்ப்பணிப்பாக தேவதாசி முறையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கஸ்தூரி. இது ஒரு மானங்கெட்ட பொழைப்பு என்று கூறி தேவதாசி முறையையே மாற்றத் துடிக்கும் லக்ஷ்மி. இப்படி எதிரும் புதிருமான பாத்திரப் படைப்புகளுடன் நாவல் நகர்கிறது. தேவதாசி முறையை அதன் அசலான முகத்துடன் மிகையின்றி அதற்கே உரிய கௌரவத்துடனும் முன் வைத்திருப்பது இந்த நாவலின் வெற்றிக்கு அடையாளம். அண்மையில் வந்திருக்கும் நாவல்களில் பொருட்படுத்தத்தக்க நாவல் இது என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 10/6/13.
—-
பிரெஞ்சு இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர், சியாமளா சவுந்தரசாமி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ.
இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைப்போல, புதுவையில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் அரங்கசாமி நாயக்கர். பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகரித்திருந்த காலத்தில், புதுவை மாநில மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இதனால் பிரெஞ்சிந்திய காந்தி என்று அழைக்கப்பட்டார். பெரும் பணக்காரான இவர் விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி சமூக சேவைகள், தொண்டுகள் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பெரும் பணக்காரனாக பிறந்து அனைத்தையும் மக்களுக்காக தந்து அவர்களின் வாழ்வுக்காக போராடிய அரங்கசாமி நாயக்கரின் வாழ்க்கை தன்னலமற்றது. அவரது வாழ்க்கையை அவர் மருமகள் சியாமளா சவுந்தரசாமி, 4 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/3/13