வெண்முரசு
வெண்முரசு, ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்.
‘மகாபாரதத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் வெண்முரசு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு என்ற நாவலின் முதல் பகுதியை, சமீபத்தில் படித்தேன். நற்றிணை பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டுள்ளது. மகாபாரதத்தை புதிய பார்வையில், இந்நாவல் பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் அவரது இணைய பக்கத்தில் வெண்முரசு வெளியிடப்படும் என, அறிவித்து ஜெயமோகன் எழுதி வருகிறார். வீட்டில் நம் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் சென்னா கதைகள் மூலமும், ராஜாஜியின் வியாசர் விருந்து, பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட பல நூல்கள் மலமும், மகாபாரதம் தொடர்பாக, கேட்டும், படித்தும் இருந்தாலும் வெண்முரசு புதிய கோணத்தில், மகாபாரத்தைப் பார்க்கிறது. இதுவரை மகாபாரத்தில் ஆண் கதாபாத்திரங்களை முன்னிறுத்தியே எழுதியுள்ளனர். ஆனால் இந்நூலில் மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடந்த போரை, இரு தரப்பும் நிறுத்திவிடலாம் என, கருதியபோது, போரை தொடர வேண்டும். முடிவு வந்தால் தான், என் கூந்தலை முடிவேன் என, திரவுபதி உறுதியாக இருந்தாள். அதனால்தான், மகாபாரத போரில் பாண்டவர்கள் வென்றனர். போரின் முக்கிய காரணகர்த்தா திரவுபதி என்ற பெண்தான். இந்த முன்னிறுத்தல், மகாபாரதம் தொடர்பாக வந்த நூல்களில் இல்லை. இதேபோல், அர்ஜுனனை மணந்த சுபத்திராவும், திரவுபதியும், அவன் இறந்த பின் எப்படி இருந்தனர், இருவருக்கும் ஒரு கணவன் என்ற நிலையில், அவர்களுக்கு இடையேயான உறவு குறித்தும், அவர்களின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதையும் வெளிப்படுத்தும், ஆசிரியரின் எழுத்து நடைமெய்சிலிர்க்க வைக்கிறது. முதல் முறையாக இதுபோன்ற அணுகுமுறையை, மகாபாரதம் குறித்து கையாண்டுள்ளார். நம் வாழ்க்கையில் நடந்தவற்றை, ஒரு நாள் திரும்பிப் பார்ப்பது போல், நம்மால் போற்றப்படும், இதிகாசத்தை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை இந்நாவல் அளிக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும், நம்முடைய அன்றாட வாழ்வின் எதிரொலியாக, மகாபாரதம் போன்ற புராணங்கள், காப்பியங்கள் உள்ளன என்பதை, வெண்முரசு படம்பிடித்து காட்டுகிறது. -பாரதி பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர். நன்றி: தினமலர், 12/10/2014.