வேதகணிதம்
வேதகணிதம், (உலகின் அதிவேக மணக்கணக்கு முறை), அன்பழகன் தேவராஜ், தமிழ் அங்காடி, பக். 188, விலை 165ரூ.
கணிதம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அனால் கணிதத்தை முறையாகக் கற்றுக்கொண்டால் அதைவிட, சுலபமான பாடம் எதுவும் இருக்காது என்பதுதான் உண்மை. கோலம் முதல் கோயில் கோபுரம் வரை எல்லாவற்றிலும் கணிதம் நீக்கமற நிறைந்துள்ளதை அறிய முடியும். அனைத்துவித அறிவியல் துறை வளர்ச்சிக்கும், கோயில் வடிவமைப்புக்கும் கணிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய அவசர யுகத்தில் காகிதத்தையும், எழுதுகோலையும் கையாளுவது வெகுவாகக் குறைதந்துவிட்டது. எனவே மாணவர்களின் கணிதம் பற்றிய ஐயங்களைக் களைவதற்கும், மிகப்பெரிய கணக்குகளை விரைவாக சுலபமாகத் தீர்ப்பதற்கும் இந்த நூலில் அற்புதமான பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. சாதாரணக் கணக்குகள் முதல் பெரிய கணக்குகள் வரை எளிதாக விடை காண்பதற்கு வேத கணிதத்தில் எளிய முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலாசிரியரின் பணி பாராட்டும் வகையில் உள்ளது. மாதிரி எடுத்துக்காட்டு கணகக்குகள் மூலம் பல்வேறு கணக்குகளை எளிதாக விடை காண முடியும் என்பதை அற்புதமாக விளக்கியுள்ளார். வேத கணிதம் எளிமையானது, சுலபமானது. துல்லியமான விடையைக் காணமுடியும், மனக்கணக்கு மூலமே விடை காணலாம். ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். எளிய சொல் விதிகளின் மூலமே விடைகாணலாம். போட்டித் தேர்வில் வேத கணிதப் பயன்பாட்டின் மூலம் மாணவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். சிக்கலான கணிதப் புதிர்களுக்குக்கூட சில நிமிடங்களில் எளிதில் விடை காணமுடியும் என்பதுதான் இந்த நூலின் சிறப்பு. வேத கணிதத்தில் 16 முதன்மை வாய்ப்பாடுகளும், 13 துணை வாய்ப்பாடுகளும் உள்ளன. இந்த வாய்ப்பாடுகள் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம், வர்க்க மூலம், கணம், கணமூலம், சிக்கலெண்கள், வகுபடுந்தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், இருபடி சமன்பாடு போன்றவற்றை மிகக் குறைந்த கால நேரத்தில் விரைவாகவும் எளிதாகவும் விடை காண முடியும் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எளிதில் புரியும்வகையில் நூலாசிரியர் சொல்லியிருப்பது மேலும் சிறப்பு. மாணவர்களுக்கு குறிப்பாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள நூல். குழந்தையிலிருந்தே நூலை படித்துத் தேர்ந்தால் எந்தக் கணக்குக்கும் மணக்கணக்கு முறையிலேயே விடையை எளிதில் கண்டுவிடலாம் என்பதே இந்த நூலின் மிகப்பெரிய பலம். நன்றி: தினமணி, 2/11/2015.