வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும்
வைரமுத்து கவிதைகளில் கருவும் உருவும், முனைவர் ம.இசக்கியப்பன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 78, விலை 105ரூ.
கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நூலை முனைவர் ம.இசக்கியப்பன் எழுதியுள்ளார். கவிஞர் ஒரு அறிமுகம், உருவகக் கொள்கை, கரு ஒரு பகுப்பு, மொழிப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் கவிஞரின் கவிதையாற்றலையும், மொழி ஆளுமையையும் அருமையான வகையில் புலப்படுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் கற்பனை, சொல்லாட்சி, அணிநயம், பழமொழியை ஆளும் திறன், ஓசை நயம் போன்றவை பரவிக் கிடப்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டும் பாங்கு பாராட்டுக்குரியது.
—-
பொன்னேடுகள், மன்னர் மன்னன், முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே அவுட், இரண்டாவது தெரு, கே.கே.சாலை, விழுப்புரம் 605602, விலை 65ரூ.
பெரியோர் வாழ்க்கையில் நடந்த அரிய நிகழ்ச்சிகள், நாட்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் ஆகியவற்றை சின்ன சின்ன கதைகள்போல அழகுபட எழுதியுள்ளார் மன்னர் மன்னன்(பாவேந்தர் பாரதிதாசனின் புதல்வர்). திரு.வி.க.வின் சொற்பொழிவைக் கேட்ட பாரதியார், இதுவல்லவா பேச்சு என்று கைதட்டி பாராட்டியது, ராஜாஜிக்கும், ஈ.வெ.ரா. பெரியாருக்கும் இருந்த நட்பு, யானை மீது பாரதிதாசன் ஊர்வலம்… இப்படி படிப்பதற்கு சுவையான பயனுள்ள தகவல்கள் ஏராளமாக இந்தப் புத்தகத்தில் உள்ளன.
—-
வேலை வழங்கும் படிப்புகள், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி-நகர், சென்னை 17, விலை 100ரூ.
10, 12ம் வகுப்பு படித்த பின்னர் எந்த படிப்பு படித்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்ற பயனுள்ள தகவல்கள் நிறைந்த புத்தகம் இது. சான்றிதழ் படிப்புகள், பட்டய படிப்புகள், பட்ட, பட்ட மேற்படிப்புகள், விவரங்கள், தொழிற்கல்வி அளிக்கும் படிப்புகள் விவரங்களை தொகுத்து தந்திருக்கிறார் கல்வி ஆலோசகர் பேராசிரியர் நெல்லை கவிநேசன். படிப்புகள் விவரங்களுடன் அந்த படிப்புகள் வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவரங்களும் இடம்பெற்றுள்ளது பயனுள்ளது. அத்துடன் உயர்கல்வி கற்க வங்கி கடன் பெறுவது குறித்த தகவல்களையும் தந்துள்ளது சிறப்பு. நன்றி: தினத்தந்தி 15/2/2012.