ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை, டாக்டர் சுதா சேஷய்யன், கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், பக். 660, விலை 300ரூ.
அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் அன்னை லலிதா. அம்பாளை வணங்கும் பேறு, பலருக்கு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட விளக்கவுரை இது. டாக்டர் சுதா சேஷய்யன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், காலம் காலமாக இந்த நாட்டில் போற்றப்படும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு சிறப்புரை எழுதியிருக்கிறார். ஸ்ரீ என்று கூறினாலே அது காலத்தோடு கற்பனை கடந்த பரம்பொருளான அன்னையைக் குறிக்கும். அப்படிப்பட்ட அன்னையை வணங்க உதவிடும் ஆயிரம் பெயர்களை, பல்வேறு தலைப்புகளில் விளக்கியிருப்பது சிறப்பான தெய்வீகப்பணியாகும். இமவான் பெற்ற மகளான அன்னைய வணங்குவோருக்கு இடர்கள் எளிதாக தீரும் என்பது காலம்காலமாக கண்ட உண்மையாகும். அதை இந்த விளக்கஉரை நூல், தமிழ் வாசகர்களுக்கு உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. புவனம் கடந்து நின்ற ஒருவனாகிய, சிவபெருமான் உள்ளத்தில் நிலைத்திருக்கும் அன்னையான அவர், உலகம் காக்க ஆலகால விடத்தை சிவபெருமான் உண்டபோது, அதை அவரது தொண்டையில் நிறுத்தி, நஞ்சை அமுதமாக்கிய பெருமாட்டி. காலம் காலமாக அந்த அன்னையை வழிபடும் தொண்டர் திருக்கூட்டம், இந்த நாட்டின் அடித்தளமாக இருப்பதால் அறிவு மேம்பட்டு, ஆன்மிகம் தழைத்து, அதனால் அறமும் நிலைத்து நிற்கிறது. அந்த அறம் மென்மேலும் சிறந்து, எல்லா உயிர்களும் வாழ, வளர இந்த நூலில் காணப்படும் தெய்வீகக் கருத்துக்கள் உதவிடும். ஆசிரியரின் ஈடுபாடும், வெளியிட்ட கிரி பதிப்பகத்தாரின் அக்கறையும் பாராட்டுதற்குரியது. -எம்.ஆர்.
—-
ஹாரி பாட்டரும் ரஸவாதக்கல்லும், ஜே.கே.ரோலிங், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிட், இரண்டாவது மாடி, உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 426003, பக். 340, விலை 299ரூ.
மாயா ஜாலக் கதைகள் மூலம், சிறுவர்களைக் கவர்ந்த ஜே.கே. ரோலிங்கின் புத்தகம், தமிழில் வெளிவந்திருக்கிறது. நல்ல முயற்சி, மொழி பெயர்ப்பாளரும், எடிட் செய்துள்ள நாகலட்சுமி ஷண்முகமும் பாராட்டுக்குரியவர்கள். நன்றி: தினமலர், 18/12/13.