தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ.
விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்திருப்பாரோ. இத்தோடு நின்றுவிடவில்லை. அந்தக்காலக் கதாநாயகனான ஹொன்னப்ப பாகவதர், மாடர்ன் தியேட்டர் தொழில்நுட்பக் கவிஞர் பி.வி.மோடக் போன்றவர்களிடம் நேடிரப் பழக்கம் விட்டல்ராவுக்கு இருந்திருக்கிறது. படங்களின் வெற்றி தோல்வி நிலவரம், வெளியான அந்தக் காலச் சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றையும் உற்றுக் கவனித்து எழுதியிருக்கிறார். விட்டல்ராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பதால் அவர் எழுதியிருக்கிற விதமும், சிறப்புக்குரியது. படங்களை வகைப்படுத்தும்போது தனிநபர்களின் அடிப்படையிலோ, சார்புடையவராகவோ எதையும் செய்யாமல் படங்களை அப்படங்களின் தன்மையிலேயே வகைப்படுத்தி எழுதியிருக்கிறார். எம்.கே.டி. பி.யு. சின்னப்பாவுக்கும் முந்தைய கலைஞர்கள், நடிகர் கே.பி.கேசவன், இசையமைப்பாளர் ரங்கசாமி நாயக்கர் போன்றவர்களையும்கூட கவனித்து எழுதியிருப்பதால், விடுபடல்களே இல்லையெனலாம். இந்நூல் ஏதோ திரையியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமோ, ரசிகர்களுக்கு மட்டுமோ என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது. ஏனெனில் அந்தக் கால அரசியல், சமூகப் பின்னணிகளும் பதிவாகியிருப்பதால் இது எல்லோருக்குமான நூல். புகைப்படங்கள் நிறைந்த அரிதினும் அரிதான நூல் இது. -ச. முத்துவேல். நன்றி: தி இந்து, 8/12/13.
—-
ஏன் சாப்பிட வேண்டும் மீன்?, சேவியர், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 80ரூ.
மீன் சாப்பிட்டால் இ.த்தனை நன்மைகள் உள்ளதா என ஆச்சரியமாக உள்ளது. மீன்களைப் பற்றியும் அதன் பயன்களை பற்றியும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/12/13.