ஹீலர்
ஹீலர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்டு தி டிரான்ஸ்பர்மேஷன் ஆப் இந்தியா, போர்ட்போலியோ/பெங்குயின், பக். 548, விலை 899ரூ.
மருத்துவர்களுக்கு விடுமுறை உண்டா? தங்கள் மூளையை இந்திய வல்லுனர்கள் வெளிநாட்டில் அர்ப்பணித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதை திரை திருப்பி இந்தியாவிற்கே பயன்படச் செய்த மேதைதான் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி என இந்திராவால் போற்றப்பட்டவர். கடந்த 1984ம் ஆண்டு, தம் 50ஆவது வயதில், இந்தியாவில் நல்வாழ்வு, ஆரோக்கியத்திற்காக, அப்போலோ மருத்துவமனையை, சென்னையில் துவக்கினார். இன்று உலகெங்கும் 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் விரிந்து பரந்து இயங்கி வருகிறது. ரெட்டியின் 80வது பிறந்தநாள் விழாவின்போது, வெளியிடப்பட்ட இந்த நூல், படிப்படியான அவரது வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. துவக்கத்தில் திருப்பதி மலை பற்றிய விளக்கமான கட்டுரையும், ரெட்டியின் அரகொண்டா குன்றுகள், சித்தூர் பற்றிய செய்திகளும் சுவாரசியமாக உள்ளன. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமையை மனத்தில் வை என்று அவரது தந்தையார்(பக். 35) ராகவ் ரெட்டி எழுதிய கடிதம்- இந்தியாவின் இதயமே நம் கைகளில்தான் உள்ளது (பக். 124) என்ற, டாக்டர் சத்தியபாலா கூறியது என, நம் மனதில் பதிய வைக்க வேண்டிய ஏராளமான தகவல்கள் இந்த நூலில்கொட்டிக்கிடக்கின்றன. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய நமக்கு விடுமுறை என்பதே இல்லை (பக். 318) என்று சொல்லும் ரெட்டி, நம்பிக்கை ஒன்றுதான் எனக்கு சக்தியை தருகிறது. ஆங்கிலத்தில் உள்ள மூன்று P அதாவது பியூரிட்டி, பெர்சிஸ்டென்ஸ், பேஷன்ஸ் ஆகியவையே என்னை உயர்த்தின என்று கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய பல நுணுக்கங்களைக் கொண்ட இந்த நூலினை ஆங்கிலத்தில் சுவை குன்றாமல் மிக விளக்கமாக நூலாசிரியர் எழுதியுள்ளது சிறப்பு. -பின்னலூரான். நன்றி: தினமலர், 3/8/2014.