அறிவுரைகள் ஜாக்கிரதை
அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ.
வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. குமாரபாளையம் எஸ்.எஸ்.எம், கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சங்கர ராமனின் நான்காவது வெளியீடுதான், அறிவுரைகள் ஜாக்கிரதை. வார்த்தைகளையே வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய விவேகானந்தர், பாரதியையும் நடைபோட வைத்திருக்கிறார். -எம்.எம்.ஜெ. நன்றி: தினமலர், 3/8/2014.
—-
உறங்கா நகரம், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை.
கிராமங்களில் செழிப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து, பல்வேறு சூழல் காரணமாக, பொருளாதார தேடலில் சென்னை வந்து இரவு பணி செய்யும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைதான் இந்த புத்தகம். துப்புரவு பணியாளர், மீனவர், போஸ்டர் ஒட்டுபவர், இரவு காவலாளி, மருத்துவமனை ஊழியர், வாக்கு சொல்லிகள், துறைமுகம் ஊழியர், பால் விற்பனையாளர், சாலை பணியாளர், காய்கறி விற்பனையாளர், செய்தித்தாள் போடுபவர், ஆட்டோ ஓட்டுனர், பேருந்து ஓட்டுனர், குல்பி, டீ விற்பனையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர்களின் இரவு பணி, அவர்களின் மகிழ்ச்சி, கவலை, வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசுவதுதான் இந்த புத்தகம். பகலில் பணிபுரிந்து, இரவில் அயர்ந்து தூங்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். 127 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 3/8/2014.