Globalisation of World politics
Globalisation of World politics, ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
உலகமயமாக்கல் உலகிற்கு வழங்கிய கொடை என்ன? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சக வெளியீடான, Globalisation of World politics An introduction to international relations என்ற நூலைப் படித்தேன். ஜான் பேலிஸ், ஸ்டீவ் ஸ்மித், ஓவன்ஸ் ஆகியோர் இதன் ஆசிரியர்கள். இந்நூல் என்னுள் பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிக்கிறான் என கம்பூனிஸ்டுகளை கேலி பேசுவதுண்டு. அகிலம் என சொல்லிகொண்டாலும், இவ்விரு ஊர்களும் ஒன்றாக முடியாது. ஒரே கொள்கை, கொடியைக் கொண்ட ரஷ்யாவும், சீனாவும் பகை நாடுகளானது, அகிலம் என்ற சொல்லை கேலிக்குரியதாக்கிவிட்டது. ஆனால் பொதுவுடைமையாளர்கள் விரும்பிய இதேபோன்ற உலகளாவிய நிலை, உண்மையிலேயே வந்துவிட முடியும் என்று யாருமே கருதி இருக்காதபோது ஒருநாள் வந்தேவிட்டது. நியூயார்க்கில் தேள் கொட்டியபோது, நியூடெல்லியில் நெறிகட்டிவிட்டது. ஆனால் சோவியத்தின் சமாதி மீதுதான், இந்த புதிய நிலை எழ முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அர்ஜென்டினா பொருளாதார சீர்குலைவும், கிழக்கு ஆசிய பொருளாதார மந்தமும், பல மைல்களுக்கு அப்பால் வாழ்பவனின், வேலையை பறித்தன. உற்பத்தியை முடக்கின. அமெரிக்க வங்கி முறிந்ததால், பாங்காக் மற்றும் பம்பாயில் இருந்தவன் பதறினான. 70 சதவீத நிறுவனங்கள், உலக வர்த்தகத்தை நடத்துகின்றன. உலகளாவிய தகவல் பரிமாற்றம் கண்ணிமைக்கும் நேரத்தில், நடக்க முடிவதே, உலகமயமாக்கலுக்கு அடித்தளமிட்டது. பன்னாட்டு முதலாளிகளின் நலனை காப்பது ஒன்றே, நாடுகளின் தேசிய கொள்கையாவிட்டது. உலகமயமாக்கலே, உலகளாவிய பயங்கரவாதத்துக்கும் பாதை அமைத்தது. உலகமயமாதல் செல்வ பெருக்கம் என்கின்றனர். ஆனால் மூன்றாம் உலக நாடுகள், முன்னிலும் மோசமான நிலையில் உள்ளன. உற்பத்தியாகிற செல்வத்தை சந்தை மறுவினியோகம் செய்யும். அதற்குள் அரசு மூக்கை நுழைக்கக்கூடாது என்கின்றனர். ஆனால் சந்தை அதை செய்யவில்லை. தெருவோரம் வாழும் மக்களும், இலவச அரிசி திட்டங்களும், செவியில் அறைந்து இதை சொல்கின்றன. தேசபக்தி போய்விட்டது. நுகர்ச்சிதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. பணம் வழிபாட்டுக்குரிய நிலையை எய்திவிட்டது. உலகமயமாக்கல், உலகிற்கு வழங்கிய கொடிட இதுதான். இதைத்தான் இந்த புத்தகம் சொல்கிறது. -பழ. கருப்பையா, எழுத்தாளர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ., நன்றி: தினமலர், 3/8/2014.