ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், தமிழில் கார்த்திகை பாண்டியன், எதிர் பதிப்பகம்.
ஒரு முகமூடிக்குப் பின்னால் ஜப்பான் மொழியில், ‘யுகுயோ மிசிமா’ எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன். கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. மூன்றாம் பாலினத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நாவல் ஆசிரியர் யுகுயோ மிசிமாவுக்கும் இதுபோன்ற பிரச்னை இருந்துள்ளது. ஆனால், தன்னை ஆண் என நிரூபிக்க, பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆண் அழகன் போட்டியில் வென்று, தன்னை ஆண் என, நிலை நிறுத்திக் கொள்கிறார். இந்த வாழ்வியல் சூழலில், 1949ல் அவர் இந்த நாவலை எழுதுகிறார். ஆங்கிலத்தில், 1958ல் மொழியாக்கம் செய்யப்பட்டது. நாவலின் நாயகன், பருவமடைந்த பின்னும் ஒரு ஆணுக்கான தகுதியைப் பெற முடிவதில்லை. அவனின் நெருங்கிய நண்பன், பருவமடைந்த பின், அவனுள் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து, அவன் மீது நாயகனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. சமூகமோ அவனை ஆணாகப் பார்க்கிறது. அவனால் ஆணாக தன்னை நிலைநிறுத்த முடியவில்லை. தன்னை ஆண் என நிரூபிக்க, பெண் ஒருத்தியை காதலிக்கிறான். அவள் மீது அவனுக்கு தீராத காதல் இருந்தும், கடைசி வரை அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஆண், பெண் என்று மட்டும் மனிதனை வகைப்படுத்தி உள்ள இந்த சமூகத்தில், மூன்றாம் பாலினத்தவர், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எப்படிப்பட்ட தாக்குதல்களை சந்திக்கின்றனர் என்பதை நாவல் விவரிக்கிறது. மூன்றாம் பாலினத்துக்கான பிரச்னைகள், பல ஆண்டுகளாக தொடர்கின்றன. சில போராட்டங்களுக்குப் பின், அவர்களுக்கான அங்கீகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக இன்று மீட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஜப்பான் நாவலாக இருந்தாலும், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமலம்’ நாவல் நம் சமூகத்தில் மூன்றாம் பாலினத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. -நேசமித்திரன் (கவிஞர்) நன்றி: தினமலர், 24/1/2016.