356 தலைக்கு மேல் கத்தி
356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ.
கோடிக்கணக்கான மக்களின் விரலில் பட்ட மையை, ஒரு துளி பேனா மையால் அழிக்க முடியுமா? முடியும் என்று சொல்வதுதான் இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை தங்களது சுயவிறுப்பு வெறுப்பின் அடிப்படையில் கலைக்க வழிவகை அமைக்கிறது சட்டம். இந்தச் சட்டத்தால் 1976, 1980, 1991 ஆகிய மூன்றுமுறை தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்திராவின் எமர்ஜென்சியை ஏற்காததால், கருணாநிதி ஆட்சி 76ல் கலைக்கப்பட்டது. கருணாநிதியின் பேச்சைக் கேட்டு 80ல் எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திரா கலைத்தார். ஜெயலலிதாவின் ஆத்திரம் காரணமாக சந்திரசேகரால் 91ல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இப்படித்தான் இந்தியா முழுக்கவே பல்வேறு மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. இந்திய அரசியல் அமைப்பின் இருண்ட பக்கங்களைச் சொல்லும் இந்த வரலாற்றை பத்திரிகையாளர் தி.சிகாமணி தொகுத்து எழுதியிருக்கிறார். தேர்தல் அரசியல், ஊழலோ ஊழல், விளம்பர யுகத்தில் ஊடக அறம் ஆகிய புத்தகங்களை ஏற்கெனவே எழுதியவர் இவர். சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் 1959ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டது. ஆளுநர் தரும் அறிக்கையை வைத்துத்தான் ஆட்சியைக் கலைக்க முடியும். ஆளுநரின் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய காலதாமத்தைக்கூடத் தாங்காமல் ஆளுநரின் அறிக்கையை தொலைபேசியில் படித்துக்காட்டி ஆட்சியைக் கலைத்துள்ளனர். ஜனநாயகம் பற்றி பக்கம்பக்கமாக எழுதிய நேரு பிரதமராக இருந்தபோது இது நடந்துள்ளது என்றால் காங்கிரஸ் தரும் ஆக்ஸிஜனில் ஆட்சி நடத்திய சந்திரசேகர் போன்றவர்கள் டிஸ்மிஸ் கோப்புகளில் கையெழுத்துப் போட்டதை எப்படிக் குறைசொல்ல முடியும்? எதிர்க் கட்சிகளை மட்டுமின்றி சொந்தக் கட்சியில் நிலவிய உட்பூசல்களை ஒழிக்கவும் 356வது பிரிவை இந்திரா எப்படி எல்லாம் பயன்படுத்தினார் என்பது இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது. ஆந்திராவில் என்.டி.ராமராவ் ஆட்சி கலைக்கப்பட்டு, அந்த மாநிலமே கொந்தளித்தது. இதுபற்றி எனக்குத் தெரியாது. செய்தி நிறுவனங்கள் இதுபற்றி செய்தி வெளியிட்ட பிறகுதான், எனக்கே தெரியும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா சொன்னார். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பொய் இதுதான் என்று வை.கோ. சொன்னார். இந்திரா சொல்வது உண்மை என்றால் இந்த நாட்டை ஆள்வது யார்? என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் இந்திரஜித் குப்தா கேட்டார். இப்படி ஜனநாயகம் கறைபட்டக் காலங்களை நம் கண் முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் செழிக்க வேண்டுமானால், 356வது பிரிவுக்கு வேட்டுவைக்க வேண்டும் என்று வாதிடுகிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 26/6/13.