365 டேக்ஸ்
365 டேக்ஸ், ஓவியர் ஆண்டி வரோல், ஆண்டி வரோல் கண்காட்சியகம் வெளியீடு.
15 நிமிடங்கள் அனைவரும் பிரபலம் மேற்கத்திய கலாசாரத்தில் பிரபலமான ஓவியர் ஆண்டி வரோல். அவர் எழுதிய 365 டேக்ஸ் என்ற ஓவிய நாவலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் இந்த நாவலை, ஆண்டி வாரோல் கண்காட்சியகம் வெளியிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில், 1960களில் பாப் கலாசாரம் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், அந்த ஆதிக்கத்தை உடைத்து, சாமானிய மக்களுக்கும் ஓவியத்தை கொண்டு சேர்த்தவர் ஆண்டி வாரோல். ஓவியங்கள், மேல்தட்டு மக்களுக்கு உரியவை. சாதாரண மக்கள் ஓவியத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு ரசிக்கும் தன்மை குறைவு என்பன போன்ற கருத்துக்களை பொய்யாக்கும் வகையில், ஆண்டி வாரோலின் ஓவியங்கள் அமைந்தன. அவர் வரைந்த மிக அற்புதமான 365 ஓவியங்களின் தொகுப்புதான் இந்த நாவல். இதில், வெறும் ஓவியங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆண்டி வாரோல் எப்படி இருந்தார், ஓவியங்களுக்கான கருவை அவர் எப்படி தேர்வு செய்தார் என்று நாவல் நீள்கிறது. அமெரிக்க ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை, குளிர்பானம் பருகுபவராக இருக்கின்றனர். பிரபல குளிர்பானங்களுக்கு, நாட்டின் முக்கியஸ்தர்கள்கூட, விளம்பர மாடலாக உள்ளனர். இந்த நிலையில், மக்கள் தினந்தோறும் சந்திக்கும், பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களை, தன் ஓவியத்தில் ஆண்டி வாரோல் பயன்படுத்தினார். அதனால், சாதாரண குடிமகனும் அவரது ஓவியத்தோடு ஒன்றினான். அவர் சொன்ன கருத்துகளை எளிதில் புரிந்து கொண்டான். ஓவியத்தோடு நின்றுவிடாமல், வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் அவர் சொல்கிறார். வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும், 15 நிமிடங்களுக்கு பிரபலம் என கூறுகிறார். இது அர்த்தமற்ற வார்த்தைகளாகத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தால், வாழ்வின் ஏதாவது ஒரு நேரத்தில், ஒவ்வொருவரும் சில நேரங்களுக்கு பிரபலமாகவே இருக்கிறோம். அவரது தத்துவங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. ஓவியனாக மட்டுமே, ஆண்டி வாரோல் பார்க்கப்படவில்லை. அவரும் அதோடு நின்றுவிடாமல், வெகுமக்களை சென்றடையும், சினிமாவிலும் கால் பதித்துள்ளார். இன்றைய இளைய ஓவியர்களுக்கு ஆண்டி வாரோலின் ஓவியங்கள் மட்டுமல்ல, அவரது தத்துவங்களும் வழிகாட்டியே. -சீராளன், ஓவியர். நன்றி: தினமலர், 5/7/2015.