எங்கதெ
எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ.
சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல சேத்துக்க மாட்டேன்னுதான் சொன்னா. சாவுறு வெளையாட்டு. இந்த ஆட்டத்தில செகண்ட் ஷோ கெடையாது என்று ஆரம்பத்திலேயே அவன் சொல்லிவிடுகிற போதும், அதிகம் அலட்டிக்கொள்ளாத, எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிகளைக் கொட்டாத அப்பெண்பாத்திரம் அவனை இம்சிக்கிறாள். என்னதான் அவளுடன் உறவு கொண்டு, அவள் காலால் சொல்லும் வேலைகளை தலையால் மேற்கொண்டு முடித்தாலும் அவளது உள்ளத்தில் எந்த இடத்தையும் பெற்றுவிட முடியாமல் அவன் தவியாய் தவித்துப் போகிறான். அவளுக்காகவே கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து, கடைசியில் அவள் இன்னொருவனுடனும் உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கையில் உடைந்து சுக்குநூறாகிப் போகும் நிலையில் அவனது உணர்வுகள் பெரும் நீர்வீழ்ச்சியாக கொட்டுகின்றன. இந்த படுமோசமான மனநிலையில் அவனைப் புரிந்துகொள்கிற சகோதரிகள், அம்மா ஆகிய உறவுகள் அவனை அணுகும்விதம் கண்ணீரை வரவழைக்கிறது. தான் கண்மூடித்தனமாக நேசிக்கும் பெண்ணின் துரோகத்தை எண்ணி மருகி, அவளைக் கொலை செய்ய எத்தனிக்கும் தருணத்துக்கும் அவளை மன்னிக்கும் தருணத்துக்கும் இடையில் நிகழும் ரசவாதம் எல்லோருக்கும் நிகழ்ந்தால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நடுதமிழகத்தின் பேச்சு மொழியில் இமையம் வடித்திருக்கும் இந்த நெடுங்கதை அவரது படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களத்தில் இயங்குகிறது. நன்றி: அந்திமழை, 1/7/2015.