இங்கிதம் பழகு
உலகம் சுற்றலாம் வாங்க, சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தசிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 96, விலை 300 ரூ.
ஸ்பெயின் நாட்டின் தக்காளித் திருவிழாவில் கலந்துகொண்டு, நாமும் தக்காளிக் குளியலை அனுபவிப்பது, தென் அமெரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில், வலம் வரும் வனவிலங்குகளை நாமும் அருகில் சென்று பார்ப்பதைப் போன்ற படபடப்பு, போலந்து நாட்டில் உள்ள விலிக்கா உப்புச் சுரங்கப்பாறைகளில் உருவாக்கிய சிலைகளை நேரில் ரசிப்பது போன்ற உணர்வு. இவையெல்லாம் சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்களின், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்ற பயண நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. உலகின் வித்தியாசமான, அதே சமயம் கட்டாயம் காணவேண்டிய இடங்களை உடன் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுவது போன்ற நடையில், ‘பளபள’ காகிதத்தில் பல வண்ணப் புகைப்படங்களுடன் இந்த நூலில் விவரித்துள்ளார். உலகம் சுற்றுபவர்கள் வாசிக்கவேண்டிய நூல்.
—
இங்கிதம் பழகு, கிரண்பேடி, பவுன் சவுத்திரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், விஸ்டம் வில்லேஜ், ஹரியானா, பக்கம் 180, விலை 125 ரூ.
கதை, காவியம், வரலாறு படிப்பதால் அறிவு வளருகிறது. ஆனால் அன்றாடம் வாழும் முறையைத் தெரிந்துகொள்ள பெரிய பெரிய நூல்கள் உதவாது. இதுபோல, ‘இங்கிதத்தைக் கற்றுத்தரும்’ கையடக்க நூல்களே இன்று பெரிதும் தேவையாக உள்ளன. காரணம் வாழ்வே திசைமாறிப் போய்க்கொண்டுள்ளது. பொதுவாழ்வில் காணும் போலித்தனங்களையும், வீண் ஆடம்பரங்களையும், அநாகரிகங்களையும் இந்த நூல் தோலுரித்துக் காட்டி திருத்த முயல்கின்றது. முதல் பெண் அதிகாரி கிரண்பேடி, துணிவுக்கும் நேர்மைக்கும் அடையாளம் ஆனவர். ராமேன் மகசேசே பரிசைப் பெற்ற இவர், புத்தகத் துறை சாணக்கியர் பவன் சவுத்திரியுடன் சேர்ந்து, இரட்டைக் குதிரை பூட்டிய தேராக இந்த நூலை அற்புதமாக எழுதியுள்ளார். அலுவலகத்தில் பழகுவது, உணவகங்களில் தங்கும்போதும், உணவருந்தும்போதும், சாலையைக் கடக்கும்போதும், விளையாட்டு மைதானங்களில், விழாக்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ஆகியவை மென்மையாகவும், உளவியல் பூர்வமாகவும் விளக்கப்பட்டுள்ளன. “திக்குத் தெரியாத காட்டில்” என்ற தலைப்பில் உள்ள கேள்வி-பதில், உரியடியில் ஏறி பரிசை அடைவதுபோல் உள்ளது. நன்றி: தினமலர் 16-09-12