சிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு
குமரி மண்ணில் கிறிஸ்தவம், ஜி. ஐசக் அருள்தாஸ், தமிழ் ஆய்வு மையம் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில், பக்கம் 294, விலை 140 ரூ.
கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரி மண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமயப் பணி, கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப் பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ‘உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை வாழ்வு வேண்டிய கிறிஸ்தவ மிஷினரிகளால், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார்கள்’. (பக் 33) 1709 ஜூலை 9ம் நாள் தரங்கம்பாடியில், சீகன்பால்கு வந்து இறங்கினார். 13 ஆண்டு காலம், தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினார். இதற்கான போதகர் கல்லூரியை, 1718ல் தொடங்கினார். மேலாடை அணிய உரிமை கோரி, தோள்சீலைக்கலகம் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதனால், கிராமம், கிராமமாக கிறிஸ்த சமயத்துக்கு மாறினர். மருத்துவம், கல்வி, கைத்தொழிலின் வழியே குமரி மண்ணில் கிறிஸ்தவம் காலூன்றியதை, இந்த நூல் கைகாட்டிப் பயணிக்கிறது. – முனைவர் மா.கி. ரமணன்
—
வரலாற்று வண்ணங்கள், பாகூர் புலவர் சு. குப்புசாமி, திருமுடி பதிப்பகம், புதுச்சேரி, பக்கம் 280, விலை 120 ரூ.
புதுச்சேரிப் பகுதியில் உள்ள பல ஊர்களில் வரலாற்றினைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல். ஆனந்த ரங்கன் கோவை என்னும் சிற்றிலக்கியம் பற்றிய அறிமுகம், இந்த நூலுக்கு இலக்கியத் தரத்தை வழங்குகிறது. கல்வெட்டுகள் இக்காலத்திலும் பல செய்திகளைத் தருகின்றன என்பதை உணர்த்துகின்றன. வண்ணங்கள் என்றால், பல நிறத்தின் கூட்டமைப்பு என்று பொருள். பல நிறத்தின் கூட்டமைப்பினைப் போல் வரலாற்றின் பல படிநிலைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த வரலாற்று வண்ணங்கள். – முகிலை ராசபாண்டியன்
—
சிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு, முனைவர் ரா. இராஜேஸ்வரன், அம்மன் தரிசனம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், சென்னை – 17, பக்கம் 188, விலை 90 ரூ.
பசிவந்திடப் பத்தும் பறந்து போகும் என்பர். அப்பசிப் பிணியைப் போக்கும்விதத்தில், சிருங்கேரி சாரதா பீடம் அரும் தொண்டாற்றி வருவதைப் பலரும் அறிவர். அத்தகு பெருமையுடைய சாரதா பீடத்தின் தோற்றம், வளர்ச்சி, அப்பீடத்தின் குருபரம்பரை வரலாறு, அதன் சமுதாயப் பணிகள் என, பல தலைப்புகளில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. மதம் என்பது, ஒரு வாழ்க்கை முறையென்றும், ஷண்மதஸ்தாபகரான ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் குறித்தும், ஆதிசங்கரர் பூரி, துவாரகை, பத்ரி, சிருங்கேரி ஆகிய நான்கு இடங்களில் மடங்களை நிறுவி, அத்வைதம் வளர்த்தார் என்றும், சிருங்கேரி மடத்திற்குரிய பெருமைகள் குறித்தும், தற்போதைய பீடாதிபதியாக அருள்பாலிக்கும் ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகளின் உயர்வு குறித்தும், இந்நூல் மிகச் சிறப்பாகக் கூறுகிறது. சிருங்கேரி மடத்தின் சமுதாயப் பணிகள் என்னும் இறுதிப் பகுதியை, ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து இன்புறவேண்டும் (பக் 157-177). நல்ல அச்சில் பிழையின்றி வெளிவந்துள்ளது. அருமையான நூல். – டாக்டர் கலியன் சம்பத்து நன்றி: தினமலர் 14-10-12