போதி தருமர்
திருக்குறள், ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2-ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5; விலை ரூ. 295
திருக்குறள் மூலமும் விளக்க உரையும் புத்தகத்தை மூத்த தமிழறிஞர் நன்னன் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்ட உரைகள் வந்திருந்தாலும் புலவர் நன்னனைப் போல எளிய முறையில் கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு குறளைச் சொல்லி அதற்கான உரைநடை, சொற்பொருள், விளக்கம், கருத்துரை என்று மிக எளிய முறையில் விளக்கி இருக்கிறார் நன்னன். 90 வயதைத் தொட்ட புலவர் மா.நன்னன் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். விவசாயியாக இருந்து பின்னர் புலவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். பின்னர் முனைவர் பட்டம் உரை பெற்ற இவர் தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, கல்லூரி, கலைக்கல்லூரி ஆகிய எல்லாவற்றிலும் பணியாற்றியவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். தனது அனுபவத்தின் பயனாக மிக அற்புதமான நூலைப் படைத்திருக்கிறார்.
—
போதி தருமர், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை – 17; விலை ரூ. 500
பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசராகப் பிறந்து, மன்னர் வாழ்வைத் துறந்து சீனாவுக்குப் பயணமாகி, மெய்ஞானம் பெற்றவர் போதி தருமர். மதம் என்ற அடையாளத்துக்குள் தன்னை அடக்கிவிடாமல் புதிய கோணத்தில் மெய்ஞானம் அடைவதற்கான தியான முறையை அறிமுகப்படுத்திய ஜென் தத்துவ சிந்தனையாளரான ஓஷோ (ரஜனீஷ்), போதி தருமர் பற்றி தெரிவித்த கருத்துகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக இந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது. போதி தருமர் பற்றிய அரிய தகவல்களுடன், அவர் கூறிய பல தத்துவங்களை சீர்தூக்கி அலசி ஆராயும் கருத்துக் கருவூலமாக இது காட்சி அளிக்கிறது. தன்னை முழுமையாக அறிந்துகொள்வதே உண்மையான மெய்ஞானம் என்ற போதி தருமரின் கருத்து ஆணித்தரமாக உதாரணங்களுடன் கூறப்பட்டுள்ளது. சுவாமி சியாமானந்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஓஷோ நமது எதிரே அமர்ந்து பேசுவது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. ஆழ்ந்து படிக்கவேண்டிய நல்ல படைப்பு.
—
அணுசக்தி அவசியமா? ஆபத்தா?, க.சிவஞானம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை ரு. 60
அணுசக்தியை ஆக்க வேலைக்கும் பயன்படுத்தலாம்; அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாம். இரண்டாவது உலகப்போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் 2 அணுகுண்டுகளை வீசின. அதனால், இரு நகரங்களும் தரைமட்டமாயின. 2 லட்சம் பேருக்கு மேல் மாண்டனர். அணுகுண்டு வெடித்தபோது ஏற்பட்ட கதிர் வீச்சினால், அணு அணுவாக செத்தவர்கள் பல லட்சம் பேர். ஆனால் அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவும் முடியும். ஆனால், ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சுனாமியின்போது, ஜப்பானில் அணுமின் உலை விபத்துக்கு உள்ளானது. கதிர்வீச்சு ஏற்பட்டது. கதிர்வீச்சினால் லட்சக்கணக்கான மக்கள் மெல்ல மெல்ல சாவார்கள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகப்போரின்போது ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டது முதல், இன்று வரை அணுசக்தியினால் ஏற்பட்ட நன்மை, தீமைகளை விவரிக்கிறார் நூலாசிரியர். நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் பற்றிய தகவலையும் தருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விரிவாகவும், எதிராகவும் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், இந்நூல் வெளி வந்திருப்பது பொருத்தமானது. படிக்கவேண்டிய பயனுள்ள புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி 07-11-2012