கரிகால் சோழன்
கரிகால் சோழன், டாக்டர் ரா. நிரஞ்சனா தேவி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 250 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-5.html
பாரம்பரிய சின்னமாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லணை, 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்றளவும் அதே கம்பீரத்துடன் நிற்கிறது என்றால் அதைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னரின் அறிவியல் திறமையை எண்ணி வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரியின் முழு வரலாறு, ஆண்டு முழுவதும் இரு கரையைத் தொட்டுக்கொண்டு ஓடும் அந்த நதியின் குறுக்கே உறுதியான அணையை கரிகாலன் கட்டியது எப்படி? அந்த மாமன்னரின் உண்மையான வரலாறு என்ன என்பது போன்ற இதுவரை வெளிவராத அற்புதமான தகவல்களைத் தாங்கி இந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியர் டாக்டர் ரா. நிரஞ்சனா தேவியின் அர்ப்பணிப்புடன் கூடிய விரிவான ஆய்வைக் காணமுடிகிறது. தமிழக மன்னர்கள் இமயமலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியது வெறும் கற்பனை அல்ல என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துவைத்து இருக்கிறார். பழங்காலத் தமிழர்களின் பொறியியல் திறனை இன்றளவும் போற்றிப் பறை சாற்றிக்கொண்டு இருக்கும் அனைத்துத் தகவல்களுடன் தற்போதைய காவிரி நீர்ப் பிரச்சினையையும் அடக்கி இருக்கும் இந்தப் புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய கருத்துப்பெட்டகமாகத் திகழ்கிறது.
—
கல்வித்தந்தை காமராஜர், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் – 641687. விலை ரூ. 200
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் மேலும் ஒரு நூல். வ.உ.சியின் சிறப்புகளை நூலாக்கி தமிழக அரசின் விருது பெற்ற நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, தற்போது காமராஜர் வாழ்க்கை வரலாற்றை அரிய நிகழ்வுகளுடன் புத்தகமாக்கி இருக்கிறார். படிக்க வசதி இல்லாமல் தூக்குப்போட முயற்சித்த கேரள இளைஞனைக் காப்பாற்றி படிக்க வைத்தது, வாரண்டுடன் தேடி அலையும் போலீசுக்குத் தெரியாமல் ரகசியமாய் திரிந்து சுதந்திரப் போராட்டப் பணிகளை ஆற்றிவிட்டு தானே போலீசை நாடி சரண் அடைந்தது, பழைய லாரிகள் மீது ஐ.ஏ.எஸ். அதிகாரி விதித்த தடையை தனது பட்டறிவுச் சிந்தனையால் விளக்கி, தடையை ரத்து செய்தது, ‘தோழமை தலைவர்கள் எடை இயந்திரத்தில் ஏறி எடையை பரிசோதிக்க, காமராஜரிடம் காசு இல்லாததால் நேரு பணம் கொடுத்து எடை பார்க்க வைத்தது’ என அரிய புதிய தகவல்கள் தேடித்தேடி நூலில் சேர்த்து இருப்பது நூலாசிரியரின் கடின உழைப்பைக் காட்டுகிறது. காமராஜரைப் பற்றிய மற்ற தலைவர்களின் பாராட்டுகள், கவிதைகள், சுவையான பெட்டிச் செய்திகள், அரிய புகைப்படங்கள் நூலுக்கு வலு சேர்க்கின்றன. ‘கல்வித்தந்தை காமராஜர்’ என்று நூலுக்கு பெயர் சூட்டி இருக்கும் நூலாசிரியர் கல்விக்கு காமராஜர் ஆற்றிய அரும்பணிகளை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம். நன்றி: தினத்தந்தி 21-11-12
