எக்ஸைல்
எக்ஸைல், சாரு நிவேதிதா, கிழக்கு பதிப்பகம், 177/103, முதள் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 440, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-204-1.html
எக்ஸைல் நாவல் ஒரு கதம்ப மாலை. நாவல் எழுதும் கலையில் பல புதிய தடங்களைக் காட்டி இருக்கிறார் சாரு. சில இடங்களில் கதை சொல்கிறார். சில இடங்களில் கட்டுரை வரைகிறார். சில இடங்களில் டயரிக் குறிப்புகள். செக்ஸ் பிரச்னைகள் குறித்து மிகவும் பகிரங்கமாக எழுதி இருக்கும் இவர் துணிச்சலைப் பாராட்டவேண்டும். ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் ஏதோ கோளாறு என்று அர்த்தம் என்று புகழ் பெற்ற பேச்சாளர் பேசுகிறார். அதைக் கேட்டு ஆயிரம்பேர் கரகோஷம் செய்கின்றனர். இது என்ன மாதிரியான நாடு? 40 வயது ஆனால், ஆண் குறியை அறுத்து எறிந்துவிட வேண்டுமா? என்று துணிச்சலுடன் கேட்கிறார் சாரு. என்னை புதுமைப்பித்தனின் ஆவியும், ஜி. நாகராஜனின் ஆவியும், நகுலனின் ஆவியும், ஆத்மாநாமின் ஆவியும், ஆதவனின் ஆவியும் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். நமது சமூகத்தையும் ஒரு இடத்தில் சாடுகிறார். நூலின் 130ம் பக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் நடந்ததாக எழுதி இருக்கும் சம்பவங்கள் நம்மை அதிர வைக்கின்றன. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்று நிறுவுகிறார். 334ம் பக்கத்தில் நான் கடவுளை நம்புபவன்தான். ஆனால் நம்பாதவனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது என்று கிண்டலடிக்கிறார். சில வரிகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. நம்மால் புறக்கணிக்க முடியாத ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்.
—-
அய்யர் வளைவு, நா. நாகராஜன், உதயா கண்ணன், 10, கல்யாண சுந்தரம் பெரு, பெரம்பூர், சென்னை 11, பக்கங்கள் 160, விலை 90ரூ.
அய்யர் வளைவு என்பது ஒரு மினி காலனி, அங்கு குடியிருக்கும் மனிதர்களின் குணச்சித்திரங்களை, கோட்டோவியமாக வரைந்து காட்டுகிறார் நாகராஜன். நாவலுக்கு சுவையூட்ட சங்கர், சுதா காதல் கதை. இடைச் சரடாக ஜிலு ஜிலுவென்று வீசுகின்ற தென்றலை போன்ற நடை. -எஸ். குரு. நன்றி: தினமலர், 19 பிப்ரவரி 2012.