சமர்ப்பணம்
சமர்ப்பணம், யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறும் போதனைகளும், ஆர்,கே. ஆழ்வார், யோகிராம் சுரத்குமார் டிரஸ்ட், திருவண்ணாமலை, பக்கங்கள் 236, விலை 80ரூ.
திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் உண்டு. சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்த பூமி. இந்த நகரின் ஆன்மிக சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் விசிறி சாமியார் என அன்பர்களால் நேசிக்கப்பட்ட யோகிராம் சுரத்குமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இவர் வழக்கம். இவருடைய ஒரு பார்வைக்கும், நல்லாசிக்கும் பலர் ஆர்வப்படும் அளவுக்கு இவரிடம் ஒரு தனி சக்தியை இறைவன் இவருக்கு வழங்கியிருந்தார். யோகியின் ஆன்மிக வாழ்க்கையினையும், அன்பர்களுக்கு யோகியிடமிருந்து கிடைத்த ஆசிகள் பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ள நூல் இது. பலருடைய அனுபவங்களை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருப்பதையும் கூறவேண்டும். நூலாசிரியர் ஆத்மார்த்தத்துடன் எழுதியுள்ள இந்த நூலினை விசிறி சாமியார்களின் அன்பர்களுடன் கூட ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்களும் படிக்கலாம். சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள ஆன்மிக சான்றோர் ஒருவரின் புத்தகம் இது. -ஜனகன்.
—-
ஞானபீடம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக்கங்கள் 184, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-5.html
தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வருணாசிரமத்தின் கால்களில் மிதியுண்டு, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தைத் திருக்குலத்தார் என்று போற்றி, அவர்களுடைய தோள்களில் கை போட்டு, வலம் வந்த கருணை வள்ளல் ராமானுஜர், தாழ்குலம் என்று பழிக்கப்பட்ட தலித்துகளுக்கும் முதன் முதலில் கோவில் வாசலில் காலெடுத்து வைக்க, நாராயணபுரத்தில் கதவுகளைத் திறந்து வைத்த கலகக்காரர் ராமானுஜர். கடவுளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், முதன் முதலில் மண்ணில் வாழும் மனிதர்களின் துயரங்களை நெஞ்சில் நிறுத்தி, அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறிய, தன்னை வருத்திக் கொண்ட தத்துவ ஞானி புத்தர். புத்தரைப் பற்றியும், ராமானுஜரைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறார் தமிழருவி. -எஸ். குரு. நன்றி: தினமலர், 26 பிப்ரவரி 2012.