உயிரே உயிரே
உயிரே உயிரே, மாலன், புதிய தலைமுறை வெளியீடு, விலை 160ரூ,‘
ஒன்றுமட்டும் சொல்வேன், ஜென்னி உன்னைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மகத்தான தியாகத்தைச் செய்கிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் வாழ்வில் உனக்குப் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீயே சோதனை செய்து பார்- இப்படி மகன் காரல் மார்க்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருடை யதந்தை, அப்பாவிடம் பெரிதும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த மார்க்ஸ், அறுபத்தைந்து வயதில் மரணமடையும்வரை தம் சட்டைப்பையில் எப்போதும் வைத்திருந்தது அவருடைய படத்தைத்தான். கஸ்தூரிபாவின் கடைசி நிமிடங்கள் பென்சிலின் போட்டால் ஒருவேளை பிழைச்சுக்கலாம்னு டாக்டர் சொல்றார் என்கிறார் பாபுஜியின் மகன் மணிலால். இனிமேல் அவளைக் காப்பாற்ற முடியாது. நீ என்னதான் அற்புத மருந்தைக் கொண்டுவந்தாலும் விட்டுடு அவளை என்று குரல் உடைந்து சொன்னார் காந்திஜி. என்ன வாழ்க்கை அது? நமக்கென்று ஒரு சுதந்திரம், ஓர் அந்தரங்கம் எதுவும் இருக்காது. அரசியல் பிரமுகர் ஆகிவிட்டால் அதுவும் தேசத்தலைவர் ஆகிவிட்டால் நமக்கு ஜலதோஷம் பிடித்தாலும் செய்தி, அதற்கு கர்ச்சீப் வாங்கப் போனாலும் செய்தி… ராஜீவுடனான நட்பு காதலாகப் பரிணமித்தபோது இப்படிச் சொன்னவர் சோனியா காந்திதான். பதினெட்டுக் கட்டுரைகள், பிரபலமான காதல் ஜோடிகளைப் பற்றி படிக்கப் படிக்க சுவையான அனுபவம். பூக்களையும் கனிகளையும் போற்றுகிற தேசத்தில் வேர்களின் வரலாற்றை நினைப்பவர்கள் யார்? என்று மாலன் கவலைப்பட வேண்டியதே இல்லை. நல்ல நூல்.
—-
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும், பால்சக்கரியா, தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி புக்ஸ், விலை 100ரூ, To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-1.html
அப்பெண்ணின் முடிக்கற்றையிலிருந்து ஒரு முல்லைப் பூ உதிர்ந்து, ஒரு வெள்ளை வெளிச்சமாக என் மடியில் விழுகிறது. இளைய நிலை இரவின் மடியில் தளர்ந்து படித்திருந்தது. இப்படிக் கவித்துவமான வர்ணனைகள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன பல சிறுகதைகளில். மலையாளத்திலிருந்து தமிழாக்கம் இயல்பாகக் கைவந்திருக்கிறது. பதினைந்து சிறுகதைகளும் வித்தியாசமான படிப்பு அனுபவத்தைத் தருகின்றன. செத்துப்போன அல்ஃபோன்சம்மா தன் உடலுக்கான இறுதிச் சடங்குகளைத் தானே பார்த்து அனுபவிப்பது. அவர்களைத் தழுவியபடி அவள் அவர்களுக்கு இடையில் பிறந்தாள் என்பதுபோல் வித்தியாசமான கற்பனை. பெரும்பாலும் மரணத்தைச் சுற்றியே பல கதைகளை ஆசிரியர் எழுதுவது கொஞ்சம் நிரடல். அதைவிடக் கதைகளுக்காகவும் ஒரு தோள் சீலைப் போராட்டம் மாதிரி நடத்த வேண்டி வருமோ என்பதுபோல் நினைக்கத் தோன்றுகிறது. நன்றி: கல்கி, 10 பிப்ரவரி 2013.