கலித்தொகை
கலித்தொகை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், அஞ்சல்பெட்டி எண்-8836, பாண்டிபஜார், சென்னை 17, பக். 400, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-035-5.html
சங்க இலக்கியங்கள், தமிழின் கருவூலம், மதிப்புடைய மூலதனம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பல புலவர்கள், பல்வேறு காலங்களில் பாடியதைத் தொகுத்ததே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதில் கலித்தொகை கலிப்பாவகை இலக்கணம சார்ந்தது. இசை வடிவம் சேர்ந்தது. துள்ளும் இசை நயமும் உவமைச் சிறப்பும், அற நெறிகளும், ஐந்திணை மக்களின் வாழ்வும், பண்பாடும், மரம், விலங்குகள், இயற்கை அழகும், 149 கலித்தொகைப் பாடல்களில் தெரிகின்றன. புரியாத பாடலையும், புலப்படுத்தித் தெளிவாக உரை எழுதும் புலியூர்க்கேசிகனின், தலைப்பும், விளக்கமும் அருஞ்சொற்பொருளும், பதம் பிரித்து எழுதும் அழகும் மிக அருகில் சென்று, பாடலோடு நம்மைப் பிணைக்கின்றன. பாலைவனத்தின் வெம்மையில் கண்ணீர் பெருகி, தண்ணீர் வேட்கையைத் தீர்க்கிறது என்ற உவமைக்கு இணை ஏது? நிழல் இல்லா பாலைக் கொடுமணலில், ஆண் மான் தன் நிழலில் பெண் மானை நிறுத்தும் பாசமிகு காதல், படிப்பவரைப் பரவசப்படுத்தும். குறிஞ்சி பாடுவதில் சிறந்த கபிலர், காதலில் கள்ளத்தனமாகப் பார்க்கும் திருட்டுப் பார்வையை கவிதையாய் தீட்டியுள்ளார்.கடைக்காணல் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன். சிவனைப் போற்றித் தொடங்கியும், முடித்தும், திருமால், முருகன் புகழைப் பாடியும் தெய்வச் சிந்தனைகளை வளர்க்கிறது சங்க கால தமிழரின் தங்கமான வாழ்வு நெறியை உணர்த்தும் நூல். -முனைவர் மாகி. இரமணன். நன்றி: தினமலர், 23/10/2011.