தேசத்தை நேசிப்போம்
தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோவில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ.
ஒரு காலத்தில் குண்டூசிக்குக் கூட நாம் லண்டனை எதிர்பார்த்திருந்த நிலை. இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். இப்படி எல்லாத் துறைகளிலுமே சாதனை படைத்து வருகிறோம். காரணம், நாம் பெற்ற சுதந்திரம். அதற்காக நம் முன்னோர் சிந்திய ரத்தமும், செய்த தியாகங்களும் அளவிட முடியாதவை. இன்றைய தலைமுறைக்கு இவற்றைச் சரியானபடி உணர்த்தத் தவறிவிட்டோம். இதன் விளைவாக மக்களிடம் தேசப்பற்று என்பது தேய்ந்து போய், முறைகேடுகள் மண்டிப் போய்விட்டன. இக்குறையைக் களைய இந்நூலாசிரியரின் சிறு முயற்சியே இந்நூல். இதில் நமது பழம் பாரதத்தின் கீர்த்தி எப்படி இருந்தது என்பதில் தொடங்கி, அது அன்னியர்களின் கைக்கு எப்படிப் போனது, அதனால் மக்கள் அடைந்த துயரங்கள், அதைத் தொடர்ந்து உருவான அடிமைத் தளை எதிர்ப்பு… என்று பல விஷயங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, சுதந்திரத்திற்கான விதைகளை விதைத்தவர்கள், போராடியவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகம் தொகுக்கப்பட்டுள்ளன. புலித்தேவன் தொடங்கி கட்டபொம்மன், திப்பு சுல்தான், காந்தி, காமராஜ், ஜீவானந்தம் வரை சுமார் 40க்கும் மேற்பட்ட மிக முக்கியப் போராட்டக்காரர்களின் வரலாற்றுக் குறிப்புகளும், தியாகங்களும் உரிய ஆதாரங்களுடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேச ஒற்றமைக்கு வலிமை கூட்டும் நூல் இது. -பரக்கத். நன்றி: துக்ளக், 22/5/2013.