கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ.

ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி முத்திரை பதித்துள்ளார். கதாபாத்திரப்படைப்பு, வர்ணனை, திருப்பங்கள் எல்லாம் சிறப்புடன் அமைந்துள்ளன. ஏராளமான சரித்திரக் கதைகள் எழுதியுள்ள விக்கிரமனின் தலைசிறந்த படைப்புகளில் கங்காபுரிக் காவலனும் ஒன்று என்று கூறலாம். கோபுலுவின் ஓவியங்கள், புத்தகத்திற்கு எழிலூட்டுகின்றன. நன்றி: தினத்தந்தி,  22/2/2012.  

—-

 

ஜே. கிருஷ்ணமூரத்தி என்ற மாமனிதர், சு.சி. அகமுடை நம்பி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 232, விலை 120ரூ.

ஜே. கே. என்று பரவலாக அறியப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் திருவள்ளுவரின் சிந்தனைகளுடன் எங்கெங்கு கைகோர்த்து நிற்கின்றன என்பதை நூலாசிரியர் திறம்பட எடுத்துரைத்துள்ளார். கடவுள்கள், கோயில்கள், புனித நூல்கள், தேசியம், தேசப்பற்று, போன்றவை யாவும் உலக ஒருமைக்கு எதிரானவை. இவற்றிலிருந்து மனித இனம் விடுபட வேண்டும். அமைப்புகள் உங்களைச் சுதந்திரமானவர்களாக ஆக்க முடியாது. அமைப்பு முறையில் நிகழும் வழிபாடோ, உங்களை நீங்களே வருத்திக் கொள்கின்ற செயல்பாடோ, உங்களைச் சுதந்திரமானவர்களாகச் செய்யாது. கோயில், நியமங்கள், சடங்குகள் போன்ற அனைத்தும் உண்மையைக் காண்பதற்கு எதிராக உள்ள தடைக்கற்களே. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலும் மற்றச் சிக்கல்கள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடையது. ஆகவே ஒரு சிக்கலை அது எதுவாக இருப்பினும் அதனை முழுமையாக நம்மால் தீர்க்க முடிந்தால் மற்ற எல்லா சிக்கல்களையும் நம்மால் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. தனிமனிதனின் உள்ளத்தில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அறிதல் வேண்டும். வேலை எதுவாயினும் அதனை விழிப்புணர்வோடு முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மனித வாழ்க்கையே தியான வாழ்க்கையாக மலர்ந்துவிடும். தனி மனிதன் தன்னளவில் வன்முறையற்றவனாக இருந்தால், போட்டி மனப்பான்மையோ, பேராசையோ, பொறாமையோ சிறிதும் இல்லாமல் அமைதியுடன் வாழ்வானாயின் அவனால் இவ்வுலகில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கிருஷ்ணமூர்த்தி இந்நூலில் திட்டவட்டமாகக் கூறுகிறார். பயனுள்ள நூல். -நன்றி:தினமணி, 27/5/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *