திருமகள் தேடி வந்தாள்
திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ.
To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html
பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் முரளி ஒரு பக்கம், அவனைக் காதலிக்கும் ஏழைப் பெண் யமுனை மறுபக்கம். சஹானாவால் ஒரு கட்டத்தில் அவமானத்திற்குள்ளாகும் முரளி, விபத்தில் சிக்க நேரிடுகிறது. இடர்ப்பாட்டில் இருக்கும் அவனுக்கு யமுனா எவ்வித கைமாறும் எதிர்பாராமல் ஓடி, ஓடி உதவுவதும் இதை அறிந்த முரளி நெக்குருகி, தன்னை ஏமாற்றிய சஹானாவின் முன்பாக யமனாவைப் பெருமைப்படுத்தி, திருமணம் செய்து கொள்வதும் என கதை முடிகிறது. நாவலாக இருந்தாலும் வாசிப்பதைத் தாண்டி ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு. யதார்த்தமான மொழி நடை. மற்றொரு கதையான மாயக்கண்கள், கொல்லிமலை சித்தரை மையப்படுத்தி நகர்கிறது. குடும்பக் கதையாகத் துளிர்த்து ஆன்மிகக் கதையாக முடிவடைகிறது. கதையை லாவகமாக நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர் லட்சுமி பிரபா. சித்தர்களுக்கே உரிய சித்து விளையாட்டுகளை பல்வேறு கதாபாத்திரங்களுடன் இணைத்து கதையை விறுவிறுப்பாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் ஒரு கதை இனிப்பு என்றால் மற்றொரு கதை தித்திப்பு. நல்லதொரு பொழுதுபோக்கு நூல். நன்றி: தினமணி, 6/5/13.
—-
மௌனியின் மறுபக்கம், ஜே.வி.நாதன், விகடன் பிரசுரம், பக். 172, விலை 75ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0000-837-1.html
புதுமைப்பித்தன், க.நா.சு, ஜெயகாந்தன் போன்ற சாதனை புரிந்த இலக்கியவாதிகளால் பாராட்டப் பெற்ற மவுனியின் எழுத்துப்பணி, இலக்கிய ஆர்வம், கொஞ்சமாய் குடும்ப வாழ்க்கை ஆகியவை பற்றி எழுதப்பட்ட புத்தகம். மவுனியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற எழுத்தாளர் ஜே.வி. நாதன், மிக அருமையாக, அவருடைய மறுபக்கத்தை, நம் முன் விரித்துக் காட்டி விவரித்திருக்கிறார். தமிழில் இது மாதிரியான எழுத்தாளர் பற்றிய புத்தகங்கள் நிறைய வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளது இந்த புத்தகம். ஜே.வி.நாதனின் பணி, பாராட்டுக்குரியது. -ஜனகன். நன்றி: தினமலர், 2/6/13.