சித்தர் பாடல்கள்
சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ.
சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் என்ற வேறொரு பொருளும் உண்டு. சித்தர்கள் நாற்பத்தி மூன்றுபேர் என, கணக்கிட்டுள்ளனர். ஆனால், பரவலாக பதினெண் சித்தர்களைப் பற்றித் தான் பல நூல்கள் மலர்ந்துள்ளன. நூலாசிரியர் இந்நூலில் 15 சித்தர்களின் பாடல்களைத் தொகுத்துள்ளார். சிவ வாக்கியம், பட்டினத்தார், பத்திரிகிரி, அகப்பேய்ச் சித்தர், அழுகனி என இவற்றில் சில. நூலாசிரியர் நூலின் முன்னுரையில் சித்தர் எனப்படுவோர் யார்? சித்தர் பாடல்களா? ஞானக்கோவையா? இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள சித்தர் பாடல்கள்-சீர்பிரிப்பும் சொற்மதிப்பும், தாளமற்ற பாடல்கள் எனத் தலைப்பிட்டு, பதினாறு பக்கங்களில் ஓர் ஆய்வுரையைத் தந்துள்ளார். பதினைந்து சித்தர்களது வரலாறு, காலம், அவர்களின் பாடல்களின் சிறப்பு, சொல்லாழம், கொள்கைகள், யாப்பமைதி, சுவைப்பரிதி என பல பக்கங்களில் நல்ல தமிழில் பதிவு செய்து, பின் பாடல்களைப் பதிவு செய்துள்ள நேர்த்தி, மிக மிக அருமை. சித்தர் பாடல்களைப் படித்து மகிழ வேண்டுவோர் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஆய்வு மாணவர்களுக்கு உதவியாக இப்புத்தகத்தின் இறுதியில் அருஞ்சொற் அகராதியையும் வெளியிட்டிருந்தால் பயனுடையதாக இருக்குமல்லவா? அற்புதமான கட்டமைப்பு, நல்ல தாள், நேர்த்தியான அச்சுக் கோப்பு, விலையோ கொள்ளை மலிவு. -குமரய்யா. நன்றி: தினமலர் 2/6/13.
—-
தமிழர் வரலாறு சில கேள்விகளும் தேடல்களும், தேவ. பேரின்பன், அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 172, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-8.html
சங்க காலத்திலிருந்து இக்காலம் வரை தமிழர் வரலாற்றின் சில போக்குகளைத் தெரிந்து கொள்ள உதவும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய நலன்களுக்கேற்ப தமிழர் வரலாற்றை எப்படிச் சித்தரித்தனர் என்பதையும், திராவிட இயக்கங்களின் தோற்றத்துக்குப் பிறகு, தமிழர் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளில் எவ்வாறு அவை சார்ந்த கண்ணோட்டங்கள் ஏற்பட்டன என்பதையும் ஒரு கட்டுரை விளங்குகிறது. காசுகள் எப்போது தோன்றின? சங்க காலத்தில் காசுகள் இருந்தனவா? என்பதை ஆராயும் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. தமிழ் சித்த மருத்துவ வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரை விளக்குகிறது. தென்னிந்தியாவின் முதல் விடுதலைப் போரான 1806 ஆம் ஆண்டின் வேலூர் கிளர்ச்சியை விளக்கும் கட்டுரையும் உள்ளது. பாரதியாரின் தத்துவ நோக்கை உருவாக்கியதில் பிரெஞ்சுப் புரட்சியின் லட்சியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவையும், ரஷ்யப் புரட்சியும், இந்தியாவில் நிகழ்ந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், தமிழகத்தில் வள்ளலாரின் மனிதேநேயப் பண்ணபாடும் காரணமாக விளங்கின என்று சொல்லும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. தமிழர் வரலாற்றின் பல்வேறு பக்கங்களைப் பற்றிய ஆழமான புரிதலை அடைய உதவும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 2/4/12.