வானம் தொடு தூரம்தான்
வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்தினம், பிருந்தா ஜயராமன், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங், 47, NP ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, பக். 248, விலை 90ரூ
குழந்தை சிறந்து விளங்காவிட்டால் பெற்றோர் சரியில்லை என்று சொல்லும் உலகம் இது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றே பெற்றோர் நினைக்கின்றனர். அவர்களுடன் எப்படி பழகுவது, எப்படி உறவை மேம்படுத்துவது, சிறந்தவர்களாக வளர்க்கும் முறைகள், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகள், குழந்தைகள் மன உலகம் எப்படி இருக்கும் அதற்குள் நாம் பயணிப்பது எப்படி? என்று பெற்றோரின் பல கேள்விகளுக்கு பதிலும் உதாரணங்களும் நிறைந்த ஒரு சிறந்த வழிகாட்டி நூல். நன்றி: குமுதம், 19/6/13
—-
தேரும் போரும், பி. ஆர். சந்திரன், யாழினி பதிப்பகம், சென்னை 108, பக். 576, விலை 420ரு.
மன்னர்களின் மானம் காத்திட மாண்டு மடிந்த போர்க்குடியினரின் வீரகாவியம்தான் தேரும் போரும். தமிழக வரலாற்றில் சிவகங்கைச் சீமையும் சேதுநாடும் போர்க்குடி வீரர்களின் உறைவிடமாகி, அரசர்கள் மோதிக் கொள்ளும் முதற் போர்க்களமாக விளங்கியது. கண்டதேவி, போரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஊர்கூடித் தேர் இழுக்கும் திருவிழாக்கள். ஆனால் அந்தத் தேரோடும் வீதியில் திகிலினை விதைத்து, வீரத்திற்கு விளக்கமாய் கலவரம் எனப் பெயர் சூட்டி தேரோட்டத்தை நிறுத்தியது எது அல்லது யார்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகத்திற்கே மனிதநேயம் கற்பித்த மண்ணில் சாதியை முன்னிறுத்தி இயற்கைப் படைத்ததைப் பிரித்து வைத்தவர் யார்? என அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்பி அதற்கு விடை காண நூலாசிரியர் உழைத்த உழைப்பு நூல் முழுவதும் தெரிகிறது. மக்கள் தங்களுக்குள் மதத்தின், இனத்தின், சாதியின் பெயரால் நிகழ்த்திய வன்செயல்களுக்கு அவர்களது மூதாதையர் காலத்துப் போர் குணமே காரணியாய் அமைந்துள்ளதாக வேதனையுடன் விவரிக்கிறார் நூலாசிரியர். பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவர் என ஆரம்பித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப போரிட்ட வீரபாண்டியன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் என அத்தனை போர்க்களங்களையும் ஒரே புத்தகத்தில் விவரிக்கிற ஆசிரியரின் முயற்சி பிரம்மிக்க வைக்கிறது. எளிய தமிழில் வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எண்ணற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. மனித குலப் பண்புகளைச் சிதைக்கும் போர்கள் ஒழிந்து, மகிழ்வினைக் கொண்டு வரும் தேரோடும் வீதிகளாக இம்மண் மாற வேண்டும் என்ற கனத்த சிந்தனையை இந்நூல் நமக்குள் கொண்டுவருவது உண்மை. நன்றி: தினமணி, 25/3/13.