ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ.

சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு பகுதிகளை மேற்கோளாகக் காட்டி இந்நூலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். தன் வறுமையைப் பொருட்படுத்தாமல் கணவனின் அன்பே பெரிதென வாழும் ராசா வந்துட்டாரு கன்னியம்மா, ஐந்து வருடங்கள் பிரித்திருந்த சகோதரனைக் கண்டதும் பாசத்தில் திக்குமுக்காடும் மௌனம் ஒரு பாஷை சுசீலா, தன் கணவனாகவே இருந்தாலும் அவனுடைய அந்தரத்தில் தலையிடுவது காட்டு மிராண்டித்தனம் என தன் மகனிடமே கூறும் அந்தரங்கம் புனிதமானது ரமணியம்மாள், உடல் வளர்ச்சிகளில் குறை இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் குறைப்பிறவி செல்வி, காலங்காலமாக விதவைகளுக்கென சமூகம் விதித்து வைத்திருந்த கட்டுகளை உடைத்து வெளியேறும் யுகசந்தி கீதா, முதலாளிக்கு உண்மையைத் தெரிய வைத்து, அவன் திருந்தி வாழ வழி செய்யும் தவறுகள் குற்றங்கள் அல்ல ஸ்டெனோ தெரஸா இப்படி எத்தனை எத்தனை பெண் பாத்திரங்கள். அத்தனையும் அற்புதமான வார்ப்புகள். ஒன்றுபோல் மற்றொன்று என்று கூற முடியாதவாறு, வெவ்வேறுவிதமான கதைகள், பாத்திரங்கள், உணர்ச்சிகள். இருந்தாலும், எல்லாக் கதைகளிலும் உரையாடல்கள் மிகவும் யதார்த்தமாகவும், தர்க்கரீதியில் நியாயமானதாகவும் அமைந்துள்ளது ஜெயகாந்தனின் தனித்தன்மையே. ஜெயகாந்தனின் எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. நன்றி: தினமணி,20/10/2013.  

—-

 

இரசவாதம், வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி, சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம், வெள்ளிங்கிரி மலைச்சாரல், முள்ளங்காடு, பூண்டி, கோவை 641114, விலை 200ரூ.

மூலிகைகளைக் கொண்டு தங்கம், வெள்ளி, செம்பு முதலான உலோகங்களை  உருவாக்குவதற்கு பெயர் இரசவாதம். இந்த ரகசியத்தை சித்தர்கள் ஓசைச்சுவடிகளில் எழுதி வைத்ததாகவும், காலப்போக்கில் அவை அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இரசவாதம் பற்றி பொக்கிஷம் என்ற தலைப்பில் எழுதி வரும் சு.ஷாஜஹான். இப்போது பொக்கிஷம் 3 புத்தகத்தை வெளியிட்டுள்ளார். புத்தகம் ஆர்ட் காகிதத்தில் அச்சாகியுள்ளது. நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *