தனிமையின் நூறு ஆண்டுகள்
தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்ககேஸ், தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 407, விலை 350ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-2.html
கனவுபோன்ற மொழியில் நனவு போன்ற உலகில். ஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது. மகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை ஹோசே அர்க்காதியோ புயேந்தியா நிர்மாணிக்கிறார். புயேந்தியா வம்சத்தின் ஏழு தலைமுறைகளால் அந்த நகரம் நிரம்புகிறது. போர், பொறாமை, கொள்ளை நோய், கோபம் என மனிதன் எதிர்கொள்ளும் சகல எதிர்மறைகளையும் எதிர்கொண்டு சிதிலமாகிறது மகோந்தா. புயேந்தியா வம்சத்தின் முதல் நபரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியா முதல், கடைசி நபரான அவுரேலியானோவரை அனைவரும் தனிமையால் நிரப்பட்டவர்கள். தனிமையின் சாரம் நபருக்கு நபர் மாறுபட்டிருந்தாலும் அவர்கள் தனிமையானவர்களே. கூட்டமாக இருந்தாலும் கூட்டத்தின் தன்மை அவர்கள் தோலுக்குக் கீழ் செல்வதில்லை. இந்த உள்ளார்ந்த தனிமைதான் நூறு ஆண்டகளின் வழியே கதையாக உருக்கொள்கிறது. இந்த நாவலின் நடையை மாய யதார்த்தம் என்றும் மாந்திரீக யதார்த்தம் என்றும் கூறுகிறார்கள். சரி, ஓர் அசலான உலகை மாயத்தனமாகப் பின்னுகிறார் மார்க்கேஸ். யதார்த்தத்தின் கீழே உள்ளடுக்கில் ஒளிந்திருக்கும் அகவயமான உலகின் வழியே நாவல் பயணிக்கிறது. நனவுலகின் கனவுத் தன்மைதான் இந்த நாவலின் நடை கனவுத்தனமான நனவின் நீட்சி அல்லது கனவுக்கும் கனவுக்கும் இடையிலான நுட்பமான அசல், மொழியாக மாறியிருக்கிறது. இந்த நுட்பமான மொழி தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்றால், அதற்கு சுகுமாரன் முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். அவரது மொழிபெயர்ப்புத் திறனையும் படைப்பாற்றலையும் உணர்ந்தவர்களுக்கு இதனை உணர்வதில் சிக்கல் இருக்காது. ஓர் இந்தியன் என்கிற முறையில் இந்த நாவலோடு உறவு பேணுவது இயல்பாகவே சாத்தியமாகிறது. அவுரேலியானோ முதன் முதலில் கொண்டுவந்த ரயிலை அலறிக்கொண்டே விவரித்த பெண், பயங்கரமான ஒரு சமையலறை தனக்குப் பின்னால் ஒரு கிராமத்தையே இழுத்து வருவதுபோல் வந்துகொண்டிருக்கிறது என்று விவரிக்கிறாள். முதன் முதலில் ரயிலைப் பார்த்ததும் நெருப்பரக்கன் வந்துட்டான். அவன் பசியாத்த புல்லுக்கட்ட போடுங்க என்ற ஆண்டிப்பட்டிப் பெண்களின் அப்பாவித்தனத்துடன் இதனை ஒப்பிட முடியும். பொதுவாகக் கீழை நாடுகளின் ஆச்சரியங்கள் லத்தின் அமெரிக்க வியப்புகளிலிருந்து பெரிதும் விலகியவை அல்ல. ஆனாலும், வியப்பின்றிப் படித்தாலும் இந்நாவலை வியக்காமல் இருக்க முடியவில்லை. -கோலாகல ஸ்ரீநிவாஸ். நன்றி: தி ஹிந்து, 6/10/2013.
