விஸ்வரூபம்
விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 4, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html
வரலாற்றின் முக்கியமான நாட்கள் விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவதுபோல இருக்குமோ என்று தோன்றுகிறது. இரா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அரசூர் வம்சம் நாவலின் தொடர்ச்சி இது. காசர்கோட்டை மையமாக கொண்டு 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கதை சொல்லப்படுகிறது. நாவலுக்கு துரைசாமி ஐயங்கார் பாணியில் விஸ்வரூபம் அல்லது உலகம் சுற்றும் ஆவிகள் என்று பெயர் வைத்திருக்கலாம். ஆவிகள் உலகத்தைச் சுற்றுவது மட்டுமல்லாமல் என் கனவிலும் சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்கின்றன. விசாலாக்ஷிக்கு காசியில் விடுதலை கிடைத்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எனக்கு நாவலில் பிடித்த பாத்திரங்கள் மகாலிங்கம், நாயுடு, கற்பகம், மற்றும் தெரசா மகாலிங்கம் எழுதும் கடிதங்களுக்குப் பதிலாக ஆசிரியரே இன்றைய மொழியில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அன்றைய மலையாள பிராமண சமூகத்தின் பேச்சு வழக்கு இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.எங்கள் பக்கத்தில் வேறு மாதிரியாகப் பேசுவார்கள். கதை நடக்கும் நாட்கள் வரலாற்றின் முக்கியமான நாட்கள். அவற்றைச் சாதாரண மக்கள் எவ்வாறு கடந்து போகிறார்கள் என்பது நாவலில் மிக நயமாகக் காட்டப்படுகிறது. பெரிய நாவல். கொஞ்சம் குறைத்து எழுதியிருக்கலாமோ? எதைக் குறைப்பது என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. மொழி மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. நாவலின் பாத்திரங்களுக்கு அமைந்திருக்கும் தனித்தன்மை வியக்கத்தக்க அளவில் இருக்கிறது. பக்கங்களைத் தள்ளிவிட்டுப் படிக்கலாம் என்று நினைத்தால் குற்ற உணர்ச்சி பிடித்து ஆட்டுகிறது. ஒரு பக்கத்தைக்கூட ஒதுக்க முடியாது. இது நாவலின் வெற்றி என்றுதான் கூற வேண்டும். லண்டன், எடின்பரோ பக்கங்களை மிகவும் ரசித்துப் படித்தேன். நன்றி: தி ஹிந்து, 10/11/13.
